செர்டாங்: விவசாயிகளுக்குச் செய்ய வேண்டிய சேவைகள், விநியோகங்கள் ஆகியவற்றை தொடர்ச்சியாக வழங்கத் தவறும் நிறுவனங்களின் ஒப்பந்தங்களை அரசாங்கம் ரத்து செய்ய வேண்டும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் வலியுறுத்தியுள்ளார்.
அத்தகைய நிறுவனங்களை நீக்கிவிட்டு, புதிய நிறுவனங்களை நியமிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். பொறுப்பற்ற நிறுவனங்கள் தொடர்ந்து செய்யும் தவறுகளால் விவசாயிகளுக்கான உதவித் திட்டங்கள் பாதிக்கப்படக்கூடாது என்று சுட்டிக்காட்டினார் பிரதமர் அன்வார்.
“இத்தகைய நிறுவனங்கள் மீண்டும் மீண்டும் தவறிழைத்தால், அவற்றின் ஒப்பந்தங்களை ரத்து செய்யுங்கள். புதிய நிறுவனத்தைத் தேர்வு செய்யுங்கள். விவசாயிகளையும் நெற்பயிரிடுவோரையும் பலிகடா ஆக்கவேண்டாம். உடனடியாக நடவடிக்கை எடுங்கள்,” என்று அவர் உத்தரவிட்டார்.
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள செர்டாங் நகரில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான மலேசிய வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் சுற்றுப்பயணக் கண்காட்சியின் நிறைவு விழாவில் உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மலேசியாவின் வேளாண்மை, உணவுப் பாதுகாப்பு அமைச்சர் முகம்மது சாபு, சிலாங்கூர் மாநில முதல்வர் அமீருதீன் ஷாரி ஆகியோரும் கலந்துகொண்டனர். விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களைக் கண்டறிந்து, அவை தங்களது கடமைகளைச் சரியாகச் செய்துள்ளனவா என்பதை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும் என்றும் தவறும்பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் அன்வார் கூறினார்.
கெடா மாநிலத்தில் நெல் விவசாயிகளுக்கு உர விநியோகம் தாமதமானதால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் போராட்டம் நடத்தி, முறையீட்டுக் கடிதங்களையும் சமர்ப்பித்திருந்ததை நிதியமைச்சருமான பிரதமர் அன்வார் சுட்டிக்காட்டினார்.
ஏற்கெனவே பருவநிலை மாற்றம், நீர்ப் பற்றாக்குறை போன்ற பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வரும் விவசாயிகளுக்கு, வேளாண் உதவித் திட்டங்கள் தடையின்றி சென்றடைவது மிகவும் முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
பொதுமக்கள் சார்ந்த பொறுப்புகளை ஏற்றுக்கொண்டவர்கள் தங்களின் செயல்பாடுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்பதை அரசாங்கம் முதன்மை இலக்காகக் கொண்டுள்ளதாகப் பிரதமர் அன்வார் தெரிவித்தார்.


