ரத்துசெய்யப்பட்ட ஏவுகணை ஒப்பந்தம்: நார்வேயைச் சாடிய மலேசியா

ரத்துசெய்யப்பட்ட ஏவுகணை ஒப்பந்தம்: நார்வேயைச் சாடிய மலேசியா

2 mins read
394f6cb2-c526-4181-bd25-f69536cf1db6
கடற்படை ஏவுகணை முறை ஒன்று. - படம்: அரபு கல்ஃப் நாடுகள் கழகம்

கடற்படை ஏவுகணை ஒப்பந்தத்தை ரத்துசெய்ததற்கு மலேசியத் தற்காப்பு அமைச்சர் காலெட் நூர்தின், நார்வேயை வெளிப்படையாகச் சாடியிருக்கிறார்.

அந்நடவடிக்கை அனைத்துலக ஒப்பந்தங்கள், உத்திபூர்வப் பங்காளித்துவங்கள் ஆகியவற்றின்மீதான நம்பிக்கையை இழக்கச்செய்வதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

23வது ‌ஷங்ரிலா கலந்துரையாடலில், போட்டித்தன்மை மிகுந்த உலகில் வட்டார அளவிலான பதற்றம் குறித்த சந்திப்பில் திரு காலெட் பேசினார். நம்பிக்கை என்பது இப்போது எல்லா தரப்பினருக்கும் சமமாக இல்லாமலிருக்கிறது என்றும் அது நிபந்தனைகளுடன் அந்தந்த சூழலுக்கு ஏற்றவாறு அமைகிறது என்றும் அவர் சாடினார். இப்போதெல்லாம் நம்பிக்கை என்பது கொடுக்கல் வாங்கல் பரிவர்த்தனைகளை மையமாகக் கொண்டே அதிகம் இருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

“அமைதிக்கான நோபெல் பரிசை வழங்குவதற்குப் பிரபலமாக இருந்துவரும் நாட்டால்கூட பின்விளைவுகள் ஏதுமின்றி கொடுத்த வாக்கைக் கைவிட முடிகிறது. அப்படியென்றால், கொள்கைகள் அடிப்படையில் அனைத்துலகத் தொடர்புகள் அமைவதில்லை என்பதாகும்,” என்று திரு காலெட் நார்வேயை விமர்சித்தார்.

தனது பாதுகாப்பிற்காக கடற்படை ஏவுகணைகள், அதைப் பாய்ச்சுவதற்கான இயந்திரம் ஆகியவற்றை மலேசியாவுக்கு அனுப்ப வகைசெய்யும் உரிமத்தை நார்வே அரசாங்கம் மீட்டுக்கொண்டதாக முன்னதாகத் தெரிவிக்கப்பட்டது.

மலேசியா செலுத்தியிருந்த கட்டணம்

ஒப்பந்தம் ரத்துசெய்யப்படுவதற்கு முன்பு மலேசியா அதற்கென 147 பில்லியன் டாலர் (188 மில்லியன் வெள்ளி) கட்டணத்தைச் செலுத்தியிருந்ததாக அமெரிக்க ஆகாயவெளி, தற்காப்பு நிறுவனம் ஒன்றை மேற்கோள்காட்டி பெர்னாமா ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது. அத்தொகை, ஒப்பந்தத்தின் மதிப்பில் ஏறத்தாழ 95 விழுக்காடாகும். ஒப்பந்தம் ரத்துசெய்யப்பட்டதைத் தொடர்ந்து ஒட்டுமொத்த இழப்பீடாக மலேசியா கிட்டத்தட்ட 251 மில்லியன் டாலரைக் கேட்கிறது.

ஏவுகணை விற்க ஆலோசிக்கும் அமெரிக்கா

மலேசியாவின் தேவையைப் பூர்த்திசெய்ய அதற்கு ஏவுகணைகளை விற்பது குறித்து அமெரிக்கா ஆலோசித்துவருவதாகவும் திரு காலெட் சனிக்கிழமை (மே 30) தெரிவித்தார். அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்செத்துடன் பேசியபோது இது தெரியவந்ததாக திரு காலெட் சொன்னார்.

“வளர்ந்துவரும் நாடுகள் ஒப்பந்தத்தை நிறைவேற்றாவிட்டால் அந்நாடு கண்டனத்துக்கும் நெருக்குதலுக்கும் உள்ளாகிறது,” என்று அவர் ஞாயிற்றுக்கிழமை (மே 31) தமது உரையில் கூறினார்.

“அதேநேரம், சக்திவாய்ந்த நாடுகள் அவற்றின் பங்காளிகளிடம் அதைச் செய்தால் அனைத்துலக அளவில் அதிகம் கேள்வி கேட்கப்படுவதில்லை,” என்றும் அவர் நார்வேயைச் சாடினார்.

குறிப்புச் சொற்கள்
உலகம்மலேசியாநார்வேஅமெரிக்காஏவுகணைஒப்பந்தம்