கஞ்சா வழக்கு: இரு மகன்களுடன் சிங்கப்பூரர் விடுவிப்பு

கஞ்சா வழக்கு: இரு மகன்களுடன் சிங்கப்பூரர் விடுவிப்பு

2 mins read
8f736471-f23a-4d02-a529-24ec492b6313
(இடமிருந்து) நேத்தன், அனில் செப்னானி, வழக்கறிஞர் லவினா ராஜா, சிதாந்த். - படம்: லவினா ராஜா

ஷா ஆலம்: மலேசியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 300 கிராமுக்கும் அதிகமான கஞ்சாவைக் கடத்தியதாகவும், கஞ்சாச்செடிகளை வளர்த்ததாகவும் தொடரப்பட்ட வழக்குகளிலிருந்து சிங்கப்பூரைச் சேர்ந்த ஒருவரும், அவரது மகன்கள் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.

அனில் செப்னானி, 63, நேத்தன், 38, சிதாந்த், 35, ஆகிய மூவரையும் ஷா ஆலம் உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஜூலை 3) விடுவித்தது.

அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அரசுத் தரப்பு மெய்ப்பிக்கத் தவறிவிட்டதாக நீதிபதி அஸ்லாம் ஸைனுதீன் தமது தீர்ப்பின்போது குறிப்பிட்டார்.

முன்னதாக, திரு அனிலும் அவரின் மகன்கள் இருவரும் சிலாங்கூர், செமெனியில் உள்ள வாடகை வீட்டில் கைதுசெய்யப்பட்டனர். அச்சுத் தொழில் செய்து வந்த அவர்கள், 2021 மார்ச் 25ஆம் தேதி கைதுசெய்யப்பட்டனர். அதுமுதல் அவர்கள் சிறையிலேயே இருந்தனர்.

அவர்கள் தங்கியிருந்த வீட்டின் மூன்றாவது தளத்தில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு 25 கண்ணாடிப் புட்டிகளில் கஞ்சா இருந்தது. மேலும், எட்டுக் கஞ்சாச்செடிகளைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அங்கிருந்த வெப்பநிலைக் கட்டுப்பாட்டுக் கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இது மரண தண்டனைக்குரிய ஒரு குற்றச்சாட்டாகும். தற்காப்பு வழக்கறிஞர்கள் கீதன் ராம் வின்சென்டும் லவினா ராஜாவும் நீதிமன்றத்தில் முக்கிய வாதங்களை முன்வைத்தனர். ‘சான் பீட்’ என்பவரால் அந்த வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டது என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் அந்தச் சொத்திற்கும் நேரடித் தொடர்பில்லை என்பதை அவர்கள் உறுதிப்படுத்தினர். அவ்வீட்டிற்குள் மூன்றாவது ஆள் வந்து செல்ல வாய்ப்பிருந்ததையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட போதிலும், மூவரும் உடனடியாகச் சிங்கப்பூர் திரும்ப முடியவில்லை. மலேசியக் குடிநுழைவுத் துறையினரால் அவர்கள் மீண்டும் கைதுசெய்யப்பட்டனர்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

உயர் நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக அரசுத் தரப்பு மேல்முறையீடு செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாகஞ்சாகடத்தல்சிங்கப்பூரர்