கேன்வாஸ் விவகாரம்: திருடப்பட்ட தரவுகளைத் திருப்பிக் கொடுக்க ஒப்பந்தம்

கேன்வாஸ் விவகாரம்: திருடப்பட்ட தரவுகளைத் திருப்பிக் கொடுக்க ஒப்பந்தம்

1 mins read
830c7d79-bbaf-4b1d-9ae6-9d425caeee2a
உலகெங்கிலும் உள்ள ஏறத்தாழ 9,000 பள்ளிகளைச் சேர்ந்த 275 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களின் தரவுகளைப் பெற்றுவிட்டதாக ஊடுருவிகள் தெரிவித்தனர் - படம்: ராய்ட்டர்ஸ்

உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான பள்ளிகள், பல்கலைக்கழகங்களால் பயன்படுத்தப்படும் மென்பொருளான கேன்வாசை உருவாக்கியவர், திருடப்பட்ட தரவுகளைத் திருப்பித் தரவும் அவற்றின் நகல்களை அழிக்கவும் அதன் இணையக் கட்டமைப்பில் அண்மையில் ஊடுருவியவர்களுடன் ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக திங்கட்கிழமையன்று (மே 11) தெரிவித்தார்.

வட அமெரிக்காவில் உள்ள அனைத்துக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 50 விழுக்காட்டுக்கும் மேற்பட்டவற்றுக்கு கேன்வாசை வழங்கும் சால்ட் லேக் சிட்டியைச் சேர்ந்த நிறுவனமான இன்ஸ்ட்ரக்சர் மீதான தாக்குதலுக்கு ஷைனிஹண்டர்ஸ் என்ற இணைய ஊடுருவல் கும்பல் பொறுப்பேற்றிருந்தது.

உலகெங்கிலும் உள்ள ஏறத்தாழ 9,000 பள்ளிகளைச் சேர்ந்த 275 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களின் தரவுகளைப் பெற்றுவிட்டதாக ஊடுருவிகள் தெரிவித்தனர். இதில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு இடையிலான தனிப்பட்ட உரையாடல்கள், அத்துடன் பெயர்கள், மின்னஞ்சல் முகவரிகள் போன்ற தனிப்பட்ட அடையாளத் தகவல்களும் அடங்கும்.

மே 7ஆம் தேதியன்று நடந்த இணையத் தாக்குதலுக்குப் பிறகு பல மணிநேரங்களுக்கு கேன்வாஸ் முடக்கப்பட்டது.

திருடப்பட்ட தரவுகளைத் திருப்பித் தருவதும், இணைய ஊடுருவிகள் தரப்பிலிருந்து தரவுகள் அழிக்கப்பட்டதை உறுதிப்படுத்துவதும் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும் என்று இன்ஸ்ட்ரக்சர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இந்தத் திருட்டின் விளைவாகத் தனது வாடிக்கையாளர்கள் யாரும் மிரட்டிப் பணம் பறிக்கப்படுவதை எதிர்கொள்ள மாட்டார்கள் என்று தனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இன்ஸ்ட்ரக்சர் மேலும் கூறியது.

தரவுகளைத் திருப்பித் தருவதற்கு ஈடாக ஊடுருவிகளுக்கு என்ன கொடுக்கப்பட்டது என்பதை இன்ஸ்ட்ரக்சர் கூறவில்லை. இந்த ஒப்பந்தம் குறித்த கேள்விகளுக்கு அந்த நிறுவனம் உடனடியாகப் பதிலளிக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்