பங்ளாதே‌ஷின் முன்னாள் பிரதமருக்கு மரண தண்டனை: ஐநா வருத்தம்

2 mins read
dac30b6c-2702-4d22-9d49-965727df57a0
பங்ளாதே‌ஷின் முன்னாள் பிரதமர் ‌ஷேக் ஹசினாவுக்கு மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. - படம்: ஏஎஃப்பி

ஜெனீவா: பங்ளாதே‌ஷின் முன்னாள் பிரதமர் ‌ஷேக் ஹசினாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது குறித்து ஐக்கிய நாட்டு நிறுவனம் வருத்தம் தெரிவித்திருக்கிறது.

மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக அவருக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பு, பாதிக்கப்பட்டோரின் வாழ்வில் முக்கியமானதொரு தருணம் என்று அது கூறியது. இருப்பினும் ஹசினாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கக்கூடாது என்று ஐநா சொன்னது.

78 வயது ஹசினா, அவருக்கு எதிரான வழக்கு விசாரணை பங்ளாதே‌ஷில் நடைபெற்றபோது, இந்தியாவில் மறைவான இடத்தில் இருந்தார். சென்ற ஆண்டு (2024) மாணவர்களின் தலைமையிலான போராட்டத்தை ஒடுக்குவதற்கு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் அவரின் பதவி பறிபோனது.

மாணவர்களுக்கு எதிரான நடவடிக்கையில் கடந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கும் ஆகஸ்ட்டுக்கும் இடையில் 1,400 பேர் வரை கொல்லப்பட்டதாக ஐநா சொல்கிறது. அதற்காக ஹசினாவுக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராகத் திட்டமிட்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் பலர் கொல்லப்பட்டதாகவும் ஐநா மனித உரிமை அலுவலகம் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் அறிக்கையொன்றில் தெரிவித்தது. தாக்குதல்களின் பின்னணியில் பங்ளாதே‌ஷின் முன்னாள் அரசாங்கம் செயல்பட்டது என்றும் அதுவே மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களாகக் கருதப்பட்டிருக்கக்கூடும் என்றும் மனித உரிமை அலுவலகம் குறிப்பிட்டது.

அறிக்கை வெளியிடப்பட்டதிலிருந்து, தாக்குதலுக்குக் காரணமானவர்களை அனைத்துலகச் சட்டங்களின்படி பொறுப்பேற்கச் செய்வதற்கு வலியுறுத்திவருவதாக அலுவலகத்தின் பேச்சாளர் ரவீனா ‌ஷம்சடானி கூறினார்.

பாதிக்கப்பட்டோருக்கு முறையான இழப்பீடு வழங்கப்படுவதற்கும் அழைப்பு விடுப்பதாக அவர் சொன்னார்.

இருப்பினும் ஹசினாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது குறித்து அலுவலகம் வருத்தம் தெரிவிப்பதாகவும் அதனை எந்தச் சூழ்நிலையிலும் எதிர்ப்பதாகவும் திருவாட்டி ‌ஷம்சடானி கூறினார்.

பங்ளாதே‌ஷுக்கு உதவிக்கரம் நீட்ட மனித உரிமை அலுவலகம் தயாராய் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தீர்ப்புக் குறித்து அனைத்துத் தரப்பினரையும் அமைதியையும் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்குமாறு அலுவலகத்தின் தலைவர் வோல்க்கர் டர்க் கேட்டுக்கொண்டதாகத் திருவாட்டி ‌ஷம்சடானி சொன்னார்.

குறிப்புச் சொற்கள்