இணைய மோசடிக் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க மியன்மார் ஒப்புதல்

இணைய மோசடிக் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க மியன்மார் ஒப்புதல்

2 mins read
ed1fe5c9-1052-4aca-93ff-e7f0dea37666
பல பில்லியன் டாலர் மதிப்புள்ள கள்ளச் சந்தையில், வெளிநாட்டவர்கள் கடத்தி வரப்பட்டுச் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. - படம்: ராய்ட்டர்ஸ்

நேப்பிடா: மியன்மாரில் பொதுமக்களைக் கட்டாயப்படுத்தி இணைய மோசடி நிலையங்களில் வேலை செய்ய வைப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க அந்நாட்டின் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

ராணுவ ஆதரவு கொண்ட மியன்மார் நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) புதிய சட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்தது.

தலைநகர் நேப்பிடாவில் நடைபெற்ற நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ‘இணைய மோசடித் தடுப்பு மசோதா’ நிறைவேற்றப்பட்டதாக அவைத்தலைவர் ஆங் லின் த்வே தெரிவித்தார்.

புதிய சட்டத்தின்படி, இணைய மோசடிகளுக்காகத் துன்புறுத்தல், அடைத்து வைத்தல் போன்ற குற்றங்களுக்கு 10 ஆண்டுச் சிறையிலிருந்து ஆயுள் தண்டனைவரை விதிக்கப்படலாம்.

மேலும், அத்தகைய குற்றங்களால் மரணம் நேரிடும் பட்சத்தில் கட்டாய மரண தண்டனை விதிக்கப்படும்.

இந்நிலையில், இணைய மோசடி நிலையங்களை நடத்துபவர்களுக்கும் மின்னிலக்க நாணய மோசடிகளில் ஈடுபடுபவர்களுக்கும் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட மியன்மாரில், உலகளாவிய இணையப் பயனாளர்களைக் குறிவைத்துப் பல மோசடி நிலையங்கள் இயங்கி வருகின்றன.

குறிப்பாக, காதல் மோசடி, மின்னிலக்க நாணய முதலீட்டு மோசடி போன்ற மோசடிகள் அதிகம் நடக்கின்றன.

பல பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்தக் கள்ளச் சந்தையில், வெளிநாட்டவர்கள் கடத்தி வரப்பட்டுச் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

முன்னாள் ராணுவ ஆட்சிக்குழுத் தலைவர் மின் ஆங் லைங் தலைமையிலான புதிய அரசாங்கம் நிறைவேற்றியுள்ள முதல் சட்டம் இதுவாகும்.

2021ஆம் ஆண்டு ஆங் சாங் சூச்சியின் ஆட்சியைக் கவிழ்த்த ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.

தனது பெயரைச் சீர்ப்படுத்தவே இச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

உள்நாட்டுப் போர் ஏற்படுத்திய நிலையற்ற சூழல் காரணமாக அனைத்துலகக் குற்றக் கும்பல்கள் மியன்மாரைத் தங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாகப் பயன்படுத்திக்கொண்டன.

குறிப்புச் சொற்கள்
மியன்மார்இணைய மோசடிமரண தண்டனை