ஈப்போ: சாலையில் வழுக்கிச் சென்ற கார் வடிகால்மீது மோதி விபத்துக்குள்ளானதில் அதில் சென்ற சிங்கப்பூரர் நால்வர் காயமுற்றனர்.
மலேசியாவின் கேமரன் மலை - சிம்பாங் பூலாய் சாலையில், கம்போங் பெர்கோமுக்கு அருகே புதன்கிழமை (செப்டமப்ர் 30) பிற்பகல் 3.25 மணியளவில் இவ்விபத்து நேர்ந்தது.
விபத்தில் சிக்கியோரில் 19. 20, 21 வயது நிரம்பிய ஆடவர் நால்வர் என்றும் இன்னொருவர் 21 வயது இளம்பெண் என்றும் பேராக் தீயணைப்பு, மீட்புத் துறையின் உதவி இயக்குநர் சபரோத்ஸி நோர் அகமது தெரிவித்தார்.
அவர்களில் மூவர்க்கு லேசான காயம் ஏற்பட்டது என்றும் தீயணைப்புப் படையினர் செல்வதற்கு முன்பே பொதுமக்களால் அவர்கள் மீட்கப்பட்டுவிட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இன்னொருவரான 20 வயது ஆடவர் ஓட்டுநர் இருக்கையில் சிக்கிக்கொண்டதாகவும் சிறப்பு மீட்புக் கருவிகளின் தீயணைப்புப் படையினர் அவரை மீட்டதாகவும் திரு சபரோத்ஸி விளக்கினார். அவருக்கும் காலில் லேசான காயம் ஏற்பட்டது.
சுகாதாரத் துறையினரின் முதலுதவிக்குப்பின் அந்நால்வரும் அவசர மருத்துவ வாகனத்தின்மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
