சோமாலியாவில் கார் வெடிகுண்டு: குறைந்தது ஐவர் உயிரிழப்பு

சோமாலியாவில் கார் வெடிகுண்டு: குறைந்தது ஐவர் உயிரிழப்பு

1 mins read
b0323426-3f38-457d-9611-97e62b47ef77
தாக்குதலில் குறைந்தது ஐவர் உயிரிழந்தனர்; இருபது பேர் காயமடைந்தனர்.  - படம்: இபிஏ

மோகாடிஷு: சோமாலியத் தலைநகர் மோகாடிஷுவில் உள்ள பிரபல உணவகம் ஒன்றுக்கு வெளியே கார் வெடிகுண்டுத் தாக்குதல் நடந்துள்ளது.

அதில் குறைந்தது ஐவர் உயிரிழந்தனர். இருபது பேர் காயமடைந்துள்ளனர்.

அவர்கள் அந்த உணகவத்தில் ஸ்பெயினுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே நடைபெற்ற யூரோ இறுதி காற்பந்தாட்டத்தைத் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தபோது தாக்குதல் நடந்ததாக காவல்துறை தெரிவித்தது.

பத்து கார்கள் முற்றிலும் அழிந்துபோனதாகவும், அதிபர் மாளிகைக்கு அருகில் பாதுகாக்கப்பட்ட இடம் ஒன்றுக்குப் பக்கத்தில் உள்ள சில கட்டடங்கள் சேதமுற்றதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தியாளர் ஒருவர் கூறினார்.

“ஆட்டத்தின் முதல் பாதி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, வெடிப்புச்சத்தம் கேட்டது. அங்கிருந்த அனைவரும் தங்களை எப்படிக் காப்பாற்றிக் கொள்ளப்போகிறார்கள் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தார்கள்,” என்று உயிர்பிழைத்தவர்களில் ஒருவரான முகமது மூசா கூறினார்.

இந்நிலையில், அல் ஷபாப் போராளிகள் அந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளனர்.

இரவு நேரத்தில் பாதுகாப்பு, அரசாங்க அதிகாரிகள் சந்திக்கும் இடத்தைக் குறிவைத்ததாக அவர்கள் கூறினர்.

ஒரு காலத்தில் சோமாலியாவின் பெரும்பகுதியை அந்தப் போராளிக் குழு ஆட்சி செய்தது.

கடந்த 17 ஆண்டுகளாக, அந்நகரிலும் சோமாலியாவின் மற்ற பகுதிகளிலும் அது பல வெடிகுண்டுத் தாக்குதல்களை நடத்திவந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்