சிட்னியில் உள்ள ர‌ஷ்ய துணைத் தூதரகத்திற்குள் புகுந்த கார்

1 mins read
79240158-2734-46c5-bca4-900e694d8116
துணைத் தூதரகத்திற்குள் புகுந்த காரை அப்புறப்படுத்தும் ஆஸ்திரேலிய அதிகாரிகள். - படம்: ராய்ட்டர்ஸ்

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ர‌ஷ்யாவின் துணைத் தூதரகத்திற்குள் கார் ஒன்று புகுந்தது. இதையடுத்து ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவம் திங்கட்கிழமை (செப்டம்பர் 1) காலை 8 மணிவாக்கில் நடந்ததாக ஆஸ்திரேலியக் காவல்துறை அதிகாரிகள் கூறினர்.

கார் மோதல் சம்பவம் தொடர்பான காணொளிகள் ஆஸ்திரேலிய ஊடகங்களில் வெளியாகியும் உள்ளன.

காணொளியில் கண்ணாடி உடைந்த நிலையில் உள்ள கார் ஒன்று ர‌ஷ்ய கொடிக் கம்பத்திற்கு அருகே நிற்கிறது.

“துணைத் தூதரகம் இருக்கும் வீதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு கார் நின்றுகொண்டிருந்தது, அதனால் உடனடியாக அதிகாரிகள் காரிடம் சென்றனர். அப்போது அந்தக் கார் ஓட்டுநர் துணைத் தூதரகத்தில் காரைப் புகுத்தினார்,” என்று காவல்துறை தெரிவித்தது.

கைது செய்யப்பட்ட நபரின் வயது 39 என்றும் 24 வயது காவல்துறை அதிகாரிக்குக் கையில் காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம்குறித்து ர‌ஷ்ய துணைத் தூதரகம் கருத்து தெரிவிக்கவில்லை.

கார் மோதல் சம்பவத்தை அடுத்து துணைத் தூதரகம் சிறிது நேரம் மூடப்பட்டது. அதன்பின்னர் அது வழக்கம்போல் செயல்படத் தொடங்கியது. விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்