வான்கூவர்: கனடாவின் வான்கூவர் நகரில் கார் ஒன்று கூட்டத்துக்குள் சென்றது.
இச்சம்பவம் தொடர்பில் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் பலர் கொல்லப்பட்டதாக வான்கூவர் காவல்துறை முன்னதாகத் தெரிவித்திருந்தது. இச்சம்பவத்தில் மேலும் பலர் காயமுற்றதாகவும் காவல்துறை குறிப்பிட்டது.
சிலர் மோசமான காயங்களுக்கு ஆளாகியிருப்பதாகவும் வரும் நாள்களில் மரண எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என்பதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.
30 வயது சந்தேக நபர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை முன்னதாகச் சொன்னது. உள்ளூர் நேரப்படி இரவு 8.14 மணியளவில் ஓட்டுநர் ஒருவர் ஈஸ்ட் 41வது அவென்யூ அண்ட் ஃபிரேசர் (East 41st Avenue and Fraser) பகுதியில் சாலை நிகழ்ச்சியில் திரண்டிருந்தோர் மீது காரைச் செலுத்தியதாக காவல்துறை எக்ஸ் தளத்தில் பதிவிட்டது.
ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் ‘லப்பு லப்பு’ (Lapu-Lapu) நிகழ்ச்சியின்போது பாதசாரிகள் சிலரை கார் மோதியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. ‘லப்பு லப்பு’, பிலிப்பீன்ஸ் கலாசாரத்தைக் கொண்டாடும் நிகழ்ச்சியாகும்.
காலனித்துவ ஆட்சியை எதிர்த்த 16ஆம் நூற்றாண்டு பிலிப்பீன்ஸ் தலைவர் ஒருவரைக் கொண்டாடும் ‘லப்பு லப்பு’, இம்மாதம் 28ஆம் தேதி நடைபெறவுள்ள கனடியப் பொதுத் தேர்தலுக்கு முந்தைய வார இறுதியில் வந்தது.
சம்பவ இடத்தில் பல காவல்துறை கார்களும் அவசர மருத்துவ உதவி வாகனங்களும் தீயணைப்பு வாகனங்களும் இருப்பதைக் காட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
இச்சம்பவத்தைத் தொடர்ந்து கனடியப் பிரதமர் மைக்கல் கார்னி, “வான்கூவர் லப்பு லப்பு நிகழ்ச்சியில் இன்று மாலை நடந்த நிகழ்வுகளைக் கேட்டபோது பேரதிர்ச்சி அடைந்தேன்,” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
வான்கூவர் மேயர் கென் சிம் எக்ஸ் தளத்தில் அதிர்ச்சி வெளிப்படுத்தியதோடு பாதிக்கப்பட்டோருக்குத் தமது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டார்.
“மிகத் துயரமான இந்நேரத்தில் பாதிக்கப்பட்டோரும் வான்கூவரின் பிலிப்பீனிய சமூகத்தினரும் எங்கள் நினைவில் இருக்கின்றனர்,” என்று அவர் வருத்தம் தெரிவித்தார்.

