கோலாலம்பூர்: மலேசியாவின் பெட்டாலிங் ஜெயா பகுதியில் வியாழக்கிழமை (நவம்பர் 12) அதிகாலை எம்ஆர்டி ரயில் பாதைத் தூணில் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
கார் கட்டுப்பாட்டை இழந்து தூணில் மோதிய பிறகு தீப்பிடித்தது. அதில் இருந்த ஆடவர், தீயில் கருகி சம்பவ இடத்திலேயே மாண்டார்.
விபத்து காலை 6.20 மணிக்கு கோலாலம்பூர் நோக்கிச் செல்லும் விரைவுச் சாலையில் நடந்ததாக பெட்டாலிங் ஜெயாவின் காவல்துறை உயர் அதிகாரி ஹூசைன் சோல்கிஃபிலி தெரிவித்தார்.
தொடக்கக் கட்ட விசாரணையில் கார் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதியது உறுதிசெய்யப்பட்டது.
மாண்ட ஆடவரின் உடல் மலையா பல்கலைக்கழகத்தின் மருத்துவ நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாண்ட ஆடவர் யார் என்பது பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.
விபத்து குறித்து விசாரணை தொடர்கிறது. விபத்தை நேரில் கண்டவர்கள் காவல்துறைக்கு உதவுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

