ஜோகூர் பாரு: மலேசியாவின் மெர்சிங் பகுதியில் கார் ஒன்று யானைக் கன்று மீது மோதி 5 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்தது. இதில் கார் ஓட்டுநர் காயமடைந்தார்.
புதன்கிழமை (ஜூலை 1) அதிகாலை 2.28 மணிக்கு இந்த விபத்து குறித்து அவசர அழைப்பு கிடைத்ததாக ஜோகூர் மாநிலத்தின் மெர்சிங் நகரத் தீயணைப்பு நிலையத் தலைவர் முகம்மது அலியாஸ் உசேன் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட 31 வயது ஓட்டுநர் குளுவாங் நகரை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்தது. சேதமடைந்த காரில் சிக்கியிருந்த அவரை மீட்ட தீயணைப்புப் படையினர், காலில் காயமடைந்த அவரைச் சிகிச்சைக்காக மெர்சிங் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்குள்ளான அந்த யானைக் கன்றின் தற்போதைய நிலை குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

