லிவர்பூல்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டி மாபெரும் வெற்றியாளர் பட்டத்தை லிவர்பூல் வென்றது.
இதையடுத்து, திங்கட்கிழமை (மே 26) வெற்றி ஊர்வலத்தை அக்குழு நடத்தியது.
திறந்தவெளி ஈரடுக்குப் பேருந்தில் கிண்ணத்துடன் லிவர்பூல் ஆட்டக்காரர்கள் நகர் உலா செல்வதைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர்.
அன்று இங்கிலாந்தின் ஸ்பிரிங் பேங்க் விடுமுறை என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது.
அப்போது திடீரென்று கார் ஒன்று கூடியிருந்த ரசிகர்களை மோதித் தள்ளியது.
இதில் 47 பேர் காயமடைந்தனர்.
காயமுற்றோரில் 27 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்களில் நால்வர் சிறுவர்கள்.
தொடர்புடைய செய்திகள்
இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகப் பிரிட்டிஷ் காவல்துறை தெரிவித்தது.
அவர்களில் சிறுவர் ஒருவரும் அடங்குவார்.
20 பேருக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டன.
அவர்களுக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.
காரை ஓட்டி ரசிகர்களை மோதித் தள்ளியதாகக் கூறப்படும் ஆடவர் கைது செய்யப்பட்டார்.
அவர் லிவர்பூல் பகுதியைச் சேர்ந்த 53 வயது பிரிட்டிஷ் ஆடவர் என்று தெரிவிக்கப்பட்டது.
ரசிகர்களை மோதித் தள்ளி கார் நின்றதும், சினங்கொண்ட பல ரசிகர்கள் அதைச் சூழ்ந்துகொண்டனர்.
கார் கண்ணாடிகளை அவர்கள் உடைக்கத் தொடங்கியபோது காவல்துறையினர் அவர்களைத் தடுத்து ஓட்டுநரைக் கைது செய்தனர்.
இச்சம்பவம் பயங்கரவாத தாக்குதல் அல்ல என்று காவல்துறை கூறியது.