சயென் (பிரான்ஸ்): வடமேற்கு பிரான்சில் ஆடவர் ஒருவர் காரை மக்கள்மீது செலுத்தியிருக்கிறார்.
புதன்கிழமை (ஆகஸ்ட் 26) பின்னிரவு நிகழ்ந்த அச்சம்பவத்தில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டதாகவும் 10 பேர் காயமுற்றதாகவும் பல தகவல்கள் தெரிவிக்கின்றன. பிறகு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
சம்பவம் உள்ளூர் நேரப்படி இரவு 10.15 மணியளவில் சயென் நகரில் நிகழ்ந்தது. தாக்குதலுக்குப் பின்னால் பயங்கரவாத நோக்கம் இருந்ததாகத் தெரியவில்லை என்று அரசாங்கத் துணை வழக்கறிஞர் கூறினார்.
எழுவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் மூவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாகவும் உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சண்டை ஒன்றுக்குப் பிறகு கார் மோதல் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது என்று காவல்துறை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். ஒரு ரயில் நிலையத்துக்கு எதிரே கார் ஒன்று வேண்டுமென்றே பாதசாரிகள்மீது மோதிக்கொண்டு சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
சந்தேக நபர், ரஷ்யாவில் பிறந்த 26 வயது ஆடவராவார். அவரைப் பற்றி உளவுத் துறையினருக்கு அதிகம் தெரியவில்லை. அவர் போக்குவரத்துக் குற்றங்களைப் புரிந்தவர் என்பது மட்டுமே காவல்துறைக்குத் தெரிந்த தகவலாகும்.
சந்தேக நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடினார். ஆனால் பின்னர் சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊஸ்ட்ரெஹம் எனும் பகுதியில் அவர் பிடிபட்டதாகக் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.


