மலேசிய வாகனங்களைவிட சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் கார் கழுவும் நிலையங்களைக் கடுமையாகக் கட்டுப்படுத்த ஜோகூர் பாரு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜூலை 25ஆம் தேதி, ஒரு சமூக ஊடகப் பதிவு பரவலாகப் பார்க்கப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு மலேசிய இணையவாசி, ஜோகூர் பாரு, தாமான் அபாத்தில் ஒரு கார் கழுவும் ஊழியர், “மன்னிக்கவும் பாஸ், சிங்கப்பூர் கார்கள் மட்டும்,” என்று தன்னைத் திருப்பி அனுப்பியதாக விவரித்திருந்தார்.
அது பற்றி பின்னர் கருத்துரைத்த அந்த கார் கழுவும் நிலையத்தின் உரிமையாளர், கூடுதல் கார்களைக் கழுவ தங்கள் நிலையத்தில் இடம் இல்லை என்று விளக்கினார்.
“உண்மையில் இன்று சிங்கப்பூரிலிருந்து பல கார்கள் மலேசியாவிற்குள் நுழைகின்றன. எனவே, அவர்கள் ஏற்கனவே முழு நாளைக்கும் முன்பதிவு செய்துள்ளனர்,” என்று மேலும் அவர் கூறினார்.
இந்தப் பதிவு இணையத்தில் பலரது அதிருப்தியை வெளிப்படுத்தியது. பல மலேசிய இணையவாசிகள் அந்தத் தொழிலின் பாரபட்சமான நடைமுறைகளைச் சாடினர்.
அதன் தொடர்பில் பேசிய ஒரு சிங்கப்பூர் இணையவாசி, “இது ஏற்றுக்கொள்ள முடியாதது. இப்படி நடக்கிறது என்று பெரும்பாலான சிங்கப்பூரர்களுக்குத் தெரியாது என்று நான் நினைக்கிறேன். இது உங்கள் சொந்த மக்களுக்கு துரோகம் செய்வது போன்றது,” என்றார்.
உள்ளூர் வாடிக்கையாளர்களைத் தவிர்த்து, அதிக கட்டணம் கிடைக்கும் என்ற காரணத்தால், சிங்கப்பூர் வாடிக்கையாளர்களுக்குச் சாதகமாக கார் கழுவும் தொழில் செய்வோர் செயல்படுவதாக சில இணையவாசிகள் குற்றம் சாட்டினர்.
“தங்கள் பணம் ஜோகூர் பொருளியலை ஆதரிக்கும் என்று சிங்கப்பூரர்கள் நினைக்கிறார்கள் என்பதால், இதுபோன்ற செயல்பாடுகள் நடக்கும் என்று அவர்கள் ஒருபோதும் உணர்ந்திருக்க மாட்டார்கள். மாறாக, வலுவான நாணய மாற்று விகிதம் மலேசியாவில் உள்ளூர்வாசிகளைக் கொன்று வருகிறது,” என்று ஒரு பயனர் கடுமையாக விமர்சித்தார்.
தொடர்புடைய செய்திகள்
இதன் தொடர்பில் கருத்துரைத்த ஜோகூர் மாநில வீட்டு வசதி, உள்ளூர் அரசாங்கக் குழுத் தலைவர் முகமட் ஜாஃப்னி முகமட் ஷுகோர், “உள்ளூர்வாசிகளுக்கு எதிராக பாகுபாடு காட்டும் விற்பனை நிலையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.
“வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களை, குறிப்பாக சிங்கப்பூர் கார்களை மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தும் எந்தவொரு கார் கழுவும் உரிமையாளரின் உரிமத்தையும் ரத்து செய்ய உள்ளூர் மன்றங்களுக்கு அறிவுறுத்தப்படும்,” என்று அவர் தெரிவித்தார்.

