கராச்சி: பாகிஸ்தானில் பதிவுசெய்யப்பட்ட போயிங் 737 வகை சரக்கு விமானம் ஒன்று கராச்சி நகருக்கு அருகே காணாமற்போனது.
அந்த விமானத்தில் ஊழியர்கள் இருந்தனர். செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) இரவு அவர்கள் ஆகாயப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுப் பிரிவுடனான தொடர்பை இழந்தனர்.
ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் கே2 ஏர்வேஸ் நிறுவனம் அந்த 27 ஆண்டுகள் பழைமையான விமானத்தை இயக்கியது. அது, கராச்சியின் தென்கிழக்குப் பகுதியில் கடலில் விழுந்திருக்கக்கூடும் என்று முதற்கட்ட விமானத் தகவல்களில் தெரியவந்தது. விமானம் பறந்துகொண்டிருந்த உயரத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் இருந்திருக்கக்கூடும் என்றும் அதற்குப் பிறகு அது விழுந்திருக்கும் என்றும் நம்பப்படுகிறது.
விமானக் கண்காணிப்புச் சேவையை வழங்கும் ஃபிளைட்ரேடார்24 தளத்தில் இத்தகவல்கள் தெரியவந்தன. காணாமற்போன விமானத்தைக் கண்டுபிடிக்க பல்வேறு அமைப்புகளின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட தேடல், மீட்புப் பணிகளைத் தொடங்கியிருப்பதாக பாகிஸ்தான் விமான நிலையங்கள் ஆணையம் ஃபேஸ்புக்கில் தெரிவித்தது.
பாகிஸ்தான் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் மற்றும் பிற அரசு நிறுவனங்களுடன் தாங்கள் ஒத்துழைத்து வருவதாக கே2 ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கருத்து கேட்டதற்கு போயிங் நிறுவனம் உடனடியாகப் பதிலளிக்கவில்லை.

