தனியார் வாடகை கார் ஓட்டுநரைத் தாக்கிய வழக்கில் தொடர்புடைய பிரிட்டிஷ் ஆடவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக இரு மேல்முறையீடுகளைச் செய்திருப்பதாகச் சிங்கப்பூர்த் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம், புதன்கிழமை (செப்டம்பர் 9) தெரிவித்துள்ளது.
அவை முறையே ஜூலை 27, செப்டம்பர் 8 ஆகிய தேதிகளில் செய்யப்பட்டன.
கடந்த 2024 ஜூன் மாதம் ‘சன்செட் வே’ பகுதியில் நடந்த சம்பவத்தில் 66 வயது ஓட்டுநர் லோ எக் யோங் தாக்கப்பட்டார். சம்பவத்தை அடுத்து, மண்டையோட்டு முறிவு, மூளைக் காயங்களுடன் அவர் காணப்பட்டார். ஓட்டுநர் லோ ஓராண்டுக்குப் பிறகு இதயநோய், பெருங்குடல் அடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
பிரிட்டனைச் சேர்ந்த ஓருச்சே மோர்கன் ஃபிடெலிஸ், 23, சிங்கப்பூர் நிரந்தரவாசியாவார். இவ்வழக்கில் திங்கட்கிழமை (செப்டம்பர் 7) அவருக்கு ஐந்து நாள் குறுகிய காலத் தடுப்புக் காவலும் 100 மணி நேரச் சமூகச் சேவையும் தண்டனையாக விதிக்கப்பட்டன.
வேண்டுமென்றே காயம் விளைவித்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஃபிடெலிஸ் கோரியிருந்தார். ஆனால், ஜூலை 15ஆம் தேதி, மாவட்ட நீதிபதி அந்தக் குற்றச்சாட்டைத் துன்புறுத்தல் என்று வகைப்படுத்தியதுடன் அதன்கீழ் ஃபிடெலிசுக்குத் தண்டனை விதித்தார் என்று தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் குறிப்பிட்டது.
திருத்தப்பட்ட குற்றச்சாட்டை ஃபிடெலிஸ் ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில், குற்றச்சாட்டைத் திருத்திய நீதிபதியின் முடிவை எதிர்த்து ஜூலை 27ஆம் தேதி முதல் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும், ஃபிடெலிசுக்கு விதிக்கப்பட்ட தண்டனை போதாது எனக் கூறி, செப்டம்பர் 8ல் இரண்டாவது மேல்முறையீட்டைத் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் செய்தது.

