கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் நிறுவனம் தொடர்பான 27 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் வழக்கு நிர்ணயிக்கப்பட்டது போலவே தொடரும் என்று அந்நாட்டு உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுபரீசிலனை செய்யுமாறு நஜிப் விடுத்த கோரிக்கையை மலேசியாவின் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் நிராகரித்தது.
நஜிப்பின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி கே. முனியாண்டியிடம் தெரிவிக்கப்பட்டது.
27 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கியது தொடர்பாகத் தம்மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளை எதிர்த்து 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதியன்று நஜிப் வழக்கு கோரினார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, 5 மில்லியன் ரிங்கிட் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
ஊழல் குற்றம் புரிந்த குற்றத்துக்காக நஜிப்புக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
பிறகு, அவரது தண்டனையை மலேசியாவின் முன்னாள் மாமன்னர் பாதியாகக் குறைத்தார்.