சாப்பிட்டதற்காகப் பிற சமயத்தவரை அறைந்த விவகாரம்; சந்தேக நபர் தற்காலிக விடுவிப்பு

2 mins read
323a6301-6fec-4172-9668-808723f31ba0
65 வயது அப்துல் ரசாக்கை ஜோகூர் நீதிமன்றம் தற்காலிகமாக விடுவித்துள்ளது. அவருக்கு எதிராகக் கூடுதல் ஆதாரங்கள் கிடைத்தால் அதே குற்றச்சாட்டின்கீழ் அவர் மீது மீண்டும் குற்றம் சுமத்தப்படலாம். - படம்: மலேசிய ஊடகம்

ஜோகூர் பாரு: இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் ஒவ்வொரு நாளும் சூரிய உதயத்திலிருந்து மறைவு வரை நோன்பிருந்து வருகின்றனர்.

இந்நிலையில், மலேசியாவில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) ஜோகூர் பாருவில் உள்ள ஒரு பல்பொருள் கடையில் முஸ்லிம் அல்லாத 21 வயது ஆடவர் ஒருவர் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.

அதைப் பார்த்த 65 வயது அப்துல் ரசாக், அந்த ஆடவரை அறைந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, அப்துல் ரசாக்கை ஜோகூர் நீதிமன்றம் தற்காலிகமாக விடுவித்துள்ளது.

அவருக்கு எதிராகக் கூடுதல் ஆதாரங்கள் கிடைத்தால் அதே குற்றச்சாட்டின்கீழ் அவர் மீது மீண்டும் குற்றம் சுமத்தப்படலாம்.

அப்துல் ரசாக் அறைந்ததில் ஆடவரின் கன்னத்தில் காயம் ஏற்பட்டிருந்ததாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தன.

பாதிக்கப்பட்ட ஆடவரை மருத்துவ அதிகாரிகள் பரிசோதித்ததாகவும் அவருக்குக் காயம் ஏற்பட்டதை உறுதிசெய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், ஆடவரை அறைந்ததாக ஒப்புக்கொண்ட அப்துல் ரசாக், அவருக்குக் காயம் ஏற்படும் வகையில் தாம் அவரைப் பலமாக அறையவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக ஆடவரை அறைந்ததற்காக அப்துல் ரசாக்கிடமும் அவரது மகனிடமிருந்தும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடமிருந்தும் வாக்குமூலம் பெற்றுக்கொண்டதாக ஜோகூர் காவல்துறைத் தலைவர் எம். குமார் தெரிவித்தார்.

அப்துல் ரசாக் மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து ஜோகூர் காவல்துறைத் தலைவர் எம். குமார், இஸ்கந்தர் புத்ரியில் உள்ள ஜோகூர் காவல்துறைத் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 18) பேசினார்.

சந்தேக நபரும் பாதிக்கப்பட்ட ஆடவரும் மலேசியர்கள் என்றார் திரு குமார்.

“இத்தகைய சம்பவம் மலேசியாவில் நிகழ்வது மிகவும் அரிது. இங்கு பல்லின, பல சமய மக்கள் ஒன்றிணைந்து சகிப்புத்தன்மையுடன் வாழ்கின்றனர். ஒருவரையொருவர் மதிக்கின்றனர்,” என்று திரு குமார் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்