மலேசிய தேசிய தின ஒத்திகையில் பலரது கவனத்தை ஈர்த்த பூனை

மலேசிய தேசிய தின ஒத்திகையில் பலரது கவனத்தை ஈர்த்த பூனை

2 mins read
4f3f893a-9a96-4a14-809c-0e409fb2f278
கோலாலம்பூரிலும் குவாந்தான் மாநில தேசிய தினக் கொண்டாட்டத்தில் தொடர்ந்து 4வது ஆண்டாக தலைகாட்டிய ‘கிங் ஓயென்’ பூனை/ - படம்: KING_OYEN2022/INSTAGRAM
Google News Preferred Icon

புத்ரா ஜெயா: மலேசியா அதன் சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 31ஆம் தேதி கொண்டாடுகிறது.

அதற்கான முழு ஒத்திகை ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 30) நடைபெற்றது.

இதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் புத்ராஜெயா சதுக்கத்தில் கூடியிருந்தனர்.

இந்த ஒத்திகையில் ஒரு பூனை பலரது கவனத்தையும் ஈர்த்தது.

‘ஜாலூர் கெமிலாங்’ கருப்பொருள் கொண்ட சட்டை, அதற்குப் பொருத்தமான தலைப்பாகை, மற்றும் குளிர்ச்சியாக கண்ணாடி அணிந்திருந்த அந்த ‘கிங் ஓயென்’ என்ற ஆரஞ்சு நிறப் பூனை காலை 6.30 மணியிலிருந்தே பார்வையாளர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது.

பெருந்திரளான மக்களுடன் உரத்த இசை ஒலித்துக் கொண்டிருந்தாலும் இந்த ஆறு வயதுப் பூனை தனது உரிமையாளரான சிட்டி ஸலிஃபா அப்துல் அஜிஸ், 53 என்பவருக்கு அருகில் எந்தவொரு பதற்றமும் இன்றி அமைதியாக அமர்ந்து அணிவகுப்பை ரசித்துக் கொண்டிருந்தது.

கோலாலம்பூர் மற்றும் குவாந்தானில் நடைபெற்ற மாநில அளவிலான கொண்டாட்டங்களைத் தொடர்ந்து, கிங் ஓயென் ‘மெர்டேகா’ கொண்டாட்டங்களில் பங்கேற்பது இது தொடர்ந்து நான்காவது ஆண்டாகும்.

கிங் ஓயென் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தபோது பேசிய சிட்டி, “அவனுக்கு இது மிகவும் பிடிக்கும். பெரிய கூட்டத்திற்கும் கேமராக்களுக்கும் அவன் முற்றிலும் பழகிவிட்டான்,” என்றார்.

ஒவ்வோர் ஆண்டும் உள்ளூர் செல்லப்பிராணி கடைகள் அவனுக்காகத் தனித்துவமான தேசப்பற்று ஆடைகளை வழங்கி உதவுவதாகவும் ஒவ்வொரு கொண்டாட்டத்தின்போது அவன் புதிய தோற்றத்தில் வலம் வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தப் பூனையின் அமைதியான சுபாவத்திற்குக் காரணம் இருக்கிறது.

படகோட்டம், கடல்நாகப் படகோட்டம், மிதிவண்டி ஓட்டுதல், குதிரையேற்றம் உள்ளிட்ட வெளிப்புற நடவடிக்கைகளுக்குச் செல்லும்போது சிட்டியும் அவருடைய பாட்டியும் கிங் ஓயனை உடன் அழைத்துச் செல்வது வழக்கம். அதனால் கிங் ஓயென் எல்லாவற்றுக்கும் பழகி விட்டான்.

“இப்போது, கூட்டத்தின் நடுவில் இருப்பதை அவன் உண்மையில் விரும்புகிறான்,” என்று அவர் கூறினார்.

சிட்டியைப் பொறுத்தவரை, கிங் ஓயெனை உடன் அழைத்து வருவது நாட்டின் ஒற்றுமையைக் கொண்டாடுவதற்கும் தேசிய உணர்வைப் பரப்புவதற்கும் ஒரு தனித்துவமான வழியாகும்.

“என்னுடைய செல்லக்குட்டிகூட ‘மெர்டேகா’ மகிழ்ச்சியைப் பகிர்வதில் நான் பெருமையடைகிறேன்,” என்று சிட்டி கூறினார்.

குறிப்புச் சொற்கள்