ஹாங்காங்: கேத்தே பசிபிக் விமான நிறுவனம் மே மாதத்தின் நடுப்பகுதியிலிருந்து ஜூன் மாதம் இறுதி வரை சில விமானப் பயணங்களை ரத்து செய்வதாகச் சனிக்கிழமை (ஏப்ரல் 11) அறிவித்துள்ளது.
விமானங்களுக்கான எரிபொருள் விலை உயர்ந்ததால் இந்த முடிவை எடுத்ததாக நிறுவனம் தெரிவித்தது.
மத்தியக் கிழக்கு வட்டாரத்தில் போர்ப் பதற்றம் நீடிப்பதால் எரிபொருள் விநியோகம் இன்னும் வழக்க நிலைக்கு வரவில்லை. இதனால் உலக நாடுகளும் போக்குவரத்து நிறுவனங்களும் கடந்த சில வாரங்களாகச் சிரமத்தை எதிர்கொள்கின்றன.
கேத்தே பசிபிக் நிறுவனம் மே 16 முதல் ஜூன் 30 வரை கிட்டத்தட்ட 2 விழுக்காட்டு விமானப் பயணங்களை ரத்து செய்கிறது.
அதேபோல் ஹெச்கே எக்ஸ்பிரஸ் மே 11ஆம் தேதி முதல் 6 விழுக்காட்டு விமானப் பயணங்களை ரத்து செய்கிறது.
துபாய், ரியாத் செல்லும் விமானச் சேவைகள் ஜூன் 30 வரை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கேத்தே பசிபிக் அறிவித்துள்ளது.

