ஹாங்காங்: மத்திய கிழக்கில் நிலவும் பூசலால் துபாய்க்கும் சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்துக்குமான விமானச் சேவைகளை மேலும் ஒரு மாதத்துக்கு நிறுத்திவைப்பதாகக் கேத்தே பசிபிக் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
மே 31ஆம் தேதி வரை ரியாத்துக்கும் துபாய்க்குமான அனைத்து விமானச் சேவைகளும் ரத்துசெய்யப்பட்டுள்ளதாகக் கேத்தே பசிபிக் அறிக்கை ஒன்றை செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) வெளியிட்டது.
விமானச் சேவைகள் ரத்தானது குறித்து பாதிக்கப்பட்ட பயணிகளிடம் தெரிவித்துவிட்டதாகக் கூறிய கேத்தே பசிபிக், மத்திய கிழக்கு நிலவரத்தை அணுக்கமாகக் கண்காணித்துவருவதாகவும் தகுந்த நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டது.
மத்திய கிழக்கு செல்லும் பயணிகளும் அங்கிருந்து வரும் பயணிகளும் பதிவுகளை மாற்றவோ மாற்று வழியில் பயணம் செய்யவோ கூடுதல் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று கேத்தே சொன்னது.
பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான்மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து துபாய்க்கும் ரியாத்துக்குமான அனைத்து விமானச் சேவைகளையும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் கேத்தே பசிபிக் ரத்துசெய்தது.
இதற்கிடையே, ஐரோப்பிய நாடுகளுக்கான பயணங்கள் அதிகரித்துள்ளதால் ஹாங்காங்கிலிருந்து பாரிசிற்கும் சூரிக்கிற்கும் இடையிலான சேவைகளைக் கேத்தே நிறுவனம் அதிகரிக்கவிருக்கிறது.
மார்ச் மாதத்தில் லண்டனுக்குமான சேவையையும் நிறுவனம் சேர்த்துக்கொண்டது.
எண்ணெய் விலை அதிகரிப்பால் கேத்தே அதன் எண்ணெய் கட்டணத்தையும் இரண்டு மடங்குக் கூட்டியுள்ளது.

