பெய்ரூட்: இஸ்ரேல், லெபனானுக்கு இடையிலான அமெரிக்க ஆதரவிலான போர்நிறுத்த உடன்பாட்டை லெபனானின் ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தைகளால் லெபனானுக்குப் பயனில்லை என்பதோடு அவமானத்தைத் தருவதாகவும் ஹிஸ்புல்லா கூறியது.
லெபனான் மக்கள் இந்த உடன்பாட்டை உறுதியாக நிராகரிப்பதாகக் கடுமையான வார்த்தைகள் அடங்கிய அறிக்கை ஒன்றில், ஈரான் ஆதரவு பெற்ற இக்குழுவின் தலைவர் நயீம் காசிம் கூறினார்.
லெபனானுக்குள் உத்தேசப் பாதுகாப்பு வட்டாரங்களை உருவாக்குவதன் வழி இஸ்ரேலும் லெபனானும், தொய்வடைந்துவரும் தங்கள் போர்நிறுத்த முயற்சியைப் புதுப்பிப்பதாக அறிவித்த பின்னரே இது நடந்துள்ளது. அந்த வட்டாரங்களில் ஹிஸ்புல்லா அமைப்பினருக்குத் தடை விதிக்கப்படும்.
அமெரிக்க வெளியுறவுத் துறை புதன்கிழமை (ஜூன் 3) வெளியிட்ட கூட்டறிக்கை ஒன்றில், ஹிஸ்புல்லாவின் முழுமையான தாக்குதல் நிறுத்தத்தைப் பொறுத்தே இந்த ஒப்பந்தம் அமையும் என்று மூன்று நாடுகளும் தெரிவித்தன.
ஆனால், இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்காத ஹிஸ்புல்லாவின் தலைவர் வியாழக்கிழமை இதற்குப் பதிலளித்தபோது, இஸ்ரேலுடனான தெற்கு முனையிலிருந்து ஹிஸ்புல்லா தாக்குதலை நிறுத்தி வீரர்களைத் திரும்பப் பெறுவது என்பது சரணடைவதற்குச் சமம் என்றும், அது இஸ்ரேலின் நோக்கங்களையே நிறைவேற்றும் என்றும் கூறினார்.
வாஷிங்டனில் அமெரிக்காவின் சமரச முயற்சியின்கீழ் நடந்த நான்காம் கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டது.
திங்கட்கிழமை அறிவிக்கப்பட்ட பகுதிப் போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இதில் ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீதான தாக்குதலை நிறுத்திக்கொண்டால், பதிலுக்கு லெபனான் தலைநகர் பெய்ரூட்மீது குண்டுவீசுவதை இஸ்ரேல் தவிர்க்கும் என்று லெபனான் கூறியிருந்தது.
தொடர்புடைய செய்திகள்
விரிவான ஒப்பந்தம் ஒன்றை எட்டும் நோக்குடன் மேற்கொண்டு பேச்சு நடத்த இரு நாடுகளின் பிரதிநிதிகளும் ஜூன் 22ல் மீண்டும் சந்திக்கவுள்ளனர்.

