மியன்மாரில் சண்டைநிறுத்தம் நீட்டிக்கப்படும்: அன்வார் இப்ராகிம்

2 mins read
eae16072-7d54-4fa9-8cd1-e4f0d4850b86
மியன்மார் ஆட்சி மன்றத் தலைவர் மின் ஹிலெய்ங்குடன் தாம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார். - படம்: ராய்ட்டர்ஸ்

பேங்காக்: மியன்மாரில் அண்மையில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் உதவி மேலும் பலரைச் சென்றடைய ஏதுவாக ராணுவத்துக்கும் பல்வேறு எதிர்த்தரப்புக் குழுக்களுக்கும் இடையேயான சண்டைநிறுத்தத்தை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 18ஆம் தேதி) கூறியுள்ளார்.

இவ்வட்டார ஒத்துழைப்பு அமைப்பான ஆசியானுக்கு இவ்வாண்டு மலேசியா தலைமை ஏற்றுள்ளது. இதைத் தொடர்ந்து மியன்மார் ஆட்சி மன்றக் குழுவிடம் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மியன்மாரில் சண்டைநிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சண்டையை மீண்டும் தூண்டும் விதமாக எந்தச் செயலிலும் யாரும் ஈடுபடக்கூடாது. அப்படி நேருமானால் இந்த மனிதநேய முயற்சி தோல்வியடைந்துவிடும்,” என்று திரு அன்வார் தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் செய்தியாளர்களிடம் கூறினார்.

“தேசிய நிர்வாகக் குழு, பிரதமர் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அரசுடன் தான் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமைந்துள்ளது,” என்று ஆட்சி மன்றக் குழுத் தலைவர் ஜெனரல் மின் ஆங் ஹிலெய்ங்க் உடனான தமது சந்திப்பை திரு அன்வார் வர்ணித்தார்.

மியன்மாரின் அனைத்துத் தரப்பினரையும் ஈடுபடுத்த வேண்டும் என்ற நோக்கில் ஜெனரல் மின் ஆங் ஹிலெய்ங்கை வியாழக்கிழமை தான் சந்தித்ததாகவும் அதன் பின்னர் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 18ஆம் தேதி) அந்நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கத்துடன் தான் கலந்து பேசியதாகவும் திரு அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

மியன்மாரில் 2021ஆம் ஆண்டு ராணுவம் அந்நாட்டு அரசைக் கவிழ்த்த பின்னர் அங்கு உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதனால் கிட்டத்தட்ட 3.5 மில்லியன் மக்கள் தங்கள் இல்லங்களிலிருந்து வெளியேறியுள்ளனர். இது அந்நாட்டுப் பொருளியலையும் சீரழித்துள்ளது.

இந்நிலையில், மார்ச் மாதப் பிற்பகுதியில் அங்கு ரிக்டர் அளவில் 7.7 சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு முக்கிய கட்டமைப்பு வசதிகளை பாழ்படுத்தி அங்குள்ள மக்களுக்கு ஆற்றொணாத் துயரைத் தந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்