ஈரானுடன் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டாலும் போர்நிறுத்தம் முடிந்துவிட்டது: டிரம்ப்

ஈரானுடன் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டாலும் போர்நிறுத்தம் முடிந்துவிட்டது: டிரம்ப்

2 mins read
8fc1ab37-5ff3-4392-8f89-53620d7b0e66
ஹோர்முஸ் நீரிணையை ஜூலை 9ஆம் தேதி கடந்த கப்பல்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: அமெரிக்காவும் ஈரானும் பேச்சுவார்த்தைகளைத் தொடர ஒப்புக்கொண்டுள்ளதாக அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், கடந்த மாதம் இருதரப்பினரும் செய்துகொண்ட போர்நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை ஈரான் நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

கடந்த வாரம் கத்தார் மற்றும் சவூதி அரேபியாவைச் சேர்ந்த மூன்று வர்த்தக எண்ணெய்க் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பதிலடியாக ஈரானியத் தளங்களை அமெரிக்கா தாக்கியது. ஈரானும் விடாப்பிடியாக, வளைகுடா நாடுகளிலுள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது.

அந்த பதிலுக்குப் பதில் தாக்குதல் வெள்ளிக்கிழமை தொடரவில்லை. போருக்கு நிரந்தர முடிவுகாண அரசதந்திர முயற்சிகளில் ஈடுபடுமாறு வட்டார நடுநிலையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திரு டிரம்ப்பின் கருத்து வெளிவந்துள்ளது.

“ஈரான் இஸ்லாமியக் குடியரசு பேச்சுவார்த்தையைத் தொடருமாறு கேட்டுக்கொண்டுள்ளது. அதற்கு நாங்கள் சம்மதிக்கிறோம். ஆனால், போர்நிறுத்தம் முடிந்துவிட்டது என்பதை அவர்களிடம் தெளிவாகத் தெரிவித்துவிட்டோம்,” என்று அவர் தமது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் தெரிவித்துள்ளார்.

அதிபரைக் கொல்ல ஈரான் முயன்றாலோ அல்லது அதற்கான முயற்சியில் ஈடுபட்டாலோ ஈரான் மீது தாக்குதல் நடத்தத் தயாராக இருக்குமாறு அமெரிக்க ராணுவத்திற்குத் தாம் உத்தரவிட்டுள்ளதாகவும் டிரம்ப் தமது பதிவில் தெரிவித்துள்ளார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

ஆனால், டிரம்ப்பின் கருத்தை ஈரான் மறுத்ததாக ஈரானின் அரசுத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

பேச்சுவார்த்தை நடத்துமாறு அமெரிக்காவிடம் கேட்கவில்லை என்றும் பேச்சுவார்த்தை நடுநிலையாளராக கத்தார் இருப்பதற்கான சம்மதம் மட்டுமே தெரிவிக்கப்பட்டதாகவும் ஈரான் கூறியதாக அது குறிப்பிட்டது.

ஈரான் போரின் தற்போதைய நிலவரம் நவம்பர் மாத நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக டிரம்ப்புக்கு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

இதற்கிடையே, “தன்னைப் படுகொலை செய்ய ஈரானியத் தலைவர்கள் திட்டமிட்டாலோ, முயன்றாலோ, அமெரிக்க ராணுவம் இஸ்லாமியக் குடியரசின் அனைத்துப் பகுதிகளையும் முற்றிலுமாகத் துடைத்தெறிந்துவிடும்,” என்று அதிபர் டோனல்ட் டிரம்ப் ஈரானை எச்சரித்துள்ளார்.

ஜூலை 10ஆம் தேதி பிற்பகுதியில் ‘ட்ரூத் சோஷியல்’ பதிவில் வெளியான அதிபரின் இந்தச் செய்தி, இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட தற்காலிக உடன்பாடு நீடிக்கும் என்ற நம்பிக்கையை அணைத்துவிடுவது போல் தோன்றியுள்ளது. இது, மோதல்கள் நிகழ்ந்த ஒரு வாரத்தின் முடிவிலும், முன்னாள் உச்ச தலைவர் அலி காமேனியின் பல நாள்கள் நீடித்த இறுதிச் சடங்கிற்குப் பின்னரும் வெளிவந்துள்ளது கவனிக்கத்தக்கது.

குறிப்புச் சொற்கள்