ஜோகூர் பாரு: மக்கள் பலரும் வந்துசெல்லும் ஜோகூர் பாரு கடைத்தொகுதியின் கூரைப்பகுதி திடீரெனப் பெயர்ந்து விழுந்ததால் அப்போது அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அச்சம்பவம் எங்கு நடந்தது என்பதை ‘தி ஸ்டார்’ ஊடகம் குறிப்பிடாவிடினும், ‘கேஎஸ்எல் சிட்டி மால்’ கடைத்தொகுதியில் சனிக்கிழமை (மார்ச் 8) இரவு 7 மணியளவில் அது நிகழ்ந்ததாக ‘சைனா பிரஸ்’ ஊடகம் தெரிவித்தது.
இச்சம்பவத்தில் ஒருவரும் காயமடையவில்லை எனக் கூறப்பட்டது.
கூரைப்பகுதி பெயர்ந்து விழுந்தது தொடர்பான படங்களும் காணொளிகளும் சமூக ஊடகத்தில் பரவியதை அடுத்து, அக்கட்டடத்தின் உறுதித்தன்மை, பாதுகாப்பு குறித்து கவலை எழுந்துள்ளது.
சம்பவம் குறித்து லார்கின் தீயணைப்பு நிலையத் தலைவர் முகம்மது சுஹாய்மி அப்துல் ஜமாலை ஞாயிற்றுக்கிழமை தொடர்புகொண்டபோது, அதுகுறித்து இதுவரை எந்தப் புகாரும் அளிக்கப்படவில்லை என்று அவர் பதிலுரைத்தார்.
இதனிடையே, கடைத்தொகுதியில் கூரைப்பகுதி பெயர்ந்து விழுந்தது குறித்து விசாரித்து வருவதாக ஜோகூர் பாரு தெற்கு மாவட்டக் காவல்துறைத் தலைவர் ராவுப் செலாமட் தெரிவித்தார்.
“காவல்துறையில் புகார் அளிக்கப்படாதபோதும், அதன் தொடர்பில் விசாரணை நடத்தி வருகிறோம்,” என்று அவர் சொன்னார்.

