தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உணர்ச்சிப் பெருக்கில் காஸா, இஸ்‌ரேல் மக்கள்

2 mins read
264800b1-21c6-49f5-bf35-f330d41932e3
அமைதி உடன்பாடு அறிவிக்கப்பட்டது டெல் அவிவின் பிணையாளிகள் சதுக்கத்தில் மக்கள் கூடி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். - படம்: இபிஏ

கான் யூனிஸ்: காஸை போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் ஏற்பட்ட செய்தியை அறிந்ததும் பாலஸ்தீன மக்களும் இஸ்ரேலிய பிணைக்கைதிகளின் குடும்பங்களும் வியாழக்கிழமை (அக்டோபர் 9) உணர்ச்சிப் பெருக்கோடு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

சில பகுதிகளில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்தபோதும், காஸாவின் சிதைந்த தெருக்களில் கூடிய இளையர்கள் கைதட்டி மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.

“ரத்தக் களரியையும் கொலைகளையும் முடிவிற்குக் கொண்டுவந்த கடவுளுக்கு நன்றி,” என்று தெற்கு காஸாவின் திரு அப்துல் மஜீத் அப்த் ரப்போ கூறினார்.

“போர் முடிவுக்கு வந்ததில் காஸாவும் அனைத்து அரபு மக்களும், உலக மக்களும் மகிழ்ச்சியாக உள்ளனர்,” என்றார் அவர்.

இஸ்‌ரேலியத் தலைநகர் டெல் அவிவ்வில், ஈராண்டுகளுக்கு முன்னர் போருக்கு வித்திட்ட ஹமாஸ் தாக்குதலின்போது பிணைபிடிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், தங்கள் அன்புக்குரியவர்களின் விடுதலையை எண்ணி மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

பிணையாளி ஒருவரின் தாயான திருவாட்டி ஐனாவ் ஜௌகாக்கர், “என்னால் இப்போது சுவாசிக்க முடிகிறது, என் உணர்வை விவரிக்க முடியவில்லை... என் மகனைப் பார்க்கும்போது என்ன சொல்வேன்? அரவணைத்து உச்சிமுகர்வேன்...” என்று உணர்ச்சிவசப்பட்டார்

அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப்பின் போர் 20 அம்ச போர் நிறுத்தத் திட்டத்தின் முதல் கட்டத்துக்கு இஸ்ரேலும் ஹமாசும் அக்டோபர் 8ஆம் தேதி இணங்கியுள்ளன. மத்திய கிழக்கைச் சீர்குலைத்த ஈராண்டு காலப் போரை இது முடிவுக்குக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“இந்த உணர்வை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை,” என்றார் முன்னாள் பிணையாளியான ஓமர் ஷெம்-டோவ்.

காஸா தெருக்களில் நிறைந்திருந்த மக்கள் ஆனந்தக் கண்ணீர் பெருக ‘அல்லாஹு அக்பர்’, ‘இறைவன் மிகப்பெரியவன்’ என்று முழக்கமிட்டனர். இந்த ஒப்பந்தம் போரை முடிவுக்குக்கொண்டு வந்து, தங்களை வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கும் என்ற நம்பிக்கையுடன் குரல் எழுப்பினர்.

எனினும், இஸ்‌ரேலியப் படைகள் இன்னும் அங்கிருப்பதால், தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்புவது குறித்து சிலர் நம்பிக்கை இழந்துள்ளனர்.

ஒப்பந்தம் அதிகாரபூர்வமாக கையெழுத்தாகும்வரை மக்கள் சொந்த இடங்களுக்குத் திரும்ப வேண்டாம் என்று ஹமாஸ் ஊடக அலுவலகம் மக்களை வலியுறுத்தியது.

இஸ்ரேலிய ராணுவமும் வடக்கு காஸாவில் வசிப்பவர்களைத் திரும்பி வர வேண்டாம் என்று எச்சரித்தது. அது ஓர் ‘ஆபத்தான போர் மண்டலமாக’ உள்ளது என்று இஸ்‌ரேல் கூறியது.

குறிப்புச் சொற்கள்