விமான நிலையக் கைது நடவடிக்கை: அமெரிக்க ‘ஐசிஇ’ அதிகாரிகளுக்குக் கண்டனம்

விமான நிலையக் கைது நடவடிக்கை: அமெரிக்க ‘ஐசிஇ’ அதிகாரிகளுக்குக் கண்டனம்

கோப்புப் படம்: ஏபி

22 Nov 2026 - 12:28 pm

2 mins read

வாஷிங்டன்: சியாட்டல்-டகோமா அனைத்துலக விமான நிலையத்தில் அமெரிக்கக் குடிநுழைவு, சுங்க அமலாக்கப் பிரிவினர் (ஐசிஇ) மேற்கொண்ட கைது நடவடிக்கை, நவம்பர் 21ஆம் தேதி அதிகாரிகளிடையேயும் அரசியல்வாதிகளிடையேயும் கடும் சினத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டை ஜனநாயகக் கட்சியினர் கைப்பற்றத் தயாராகிவரும் நிலையில், அப்பிரிவின் அணுகுமுறைகளை விசாரிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

லாஸ் ஏஞ்சலிஸ் செல்லும் அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறுவதற்காக நடைப்பாலத்தில் நின்ற பயணிகளை முகக்கவசம் அணிந்த அதிகாரிகள் வழிமறித்து, ஒரு பெண்ணைக் கீழே தள்ளியதைக் காட்டும் காணொளி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் விமானப் புறப்பாடு தாமதமானது.

விசா காலம் முடிந்தும் தங்கியிருந்த மெக்சிகோ நாட்டவர் ரிக்கார்டோ லாரோண்டோ மென்டோசாவைக் கைதுசெய்ய முயன்றபோது, பிற பயணிகள் தடுத்ததாக 'ஐசிஇ’ பிரிவு கூறியது. அப்போது தங்கள் அதிகாரிகள்மீது சூடான காப்பியை ஊற்றிய சோபியா ஹெர்னாண்டஸ் மெஜியா என்ற பெண்ணும் கைது செய்யப்பட்டார். அதிகாரியைத் தாக்கியதாக அவர்மீது குற்றம் சாட்டப்படவுள்ளது.

இந்த அமலாக்க நடவடிக்கை குறித்துத் தங்களுக்கு முன்னறிவிப்பு இல்லை எனவும் உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டனவா என்பதை ஆராய்ந்து வருவதாகவும் அலாஸ்கா ஏர்லைன்ஸ் தெரிவித்தது.

சியாட்டல் துறைமுக நிர்வாகம் இச்சம்பவம் தொடர்பில் கடும் அதிருப்தி வெளியிட்டதுடன், உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையுடன் இது குறித்துப் பேசிவருகிறது.

இச்சம்பவம் குறித்து 2027 ஜனவரி 3ஆம் தேதி ஜனநாயகக் கட்சி தலைமையிலான நாடாளுமன்றத்திற்கு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் பதிலளிக்க நேரிடும் என செனட்டர் பேட்டி முர்ரே எச்சரித்துள்ளார். வாஷிங்டன் ஆளுநர் பாப் பெர்குசன், 'ஐசிஇ’ பிரிவு முற்றிலும் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாகச் சாடினார். முன்னதாக, அக்டோபரிலும் லாஸ் ஏஞ்சலிஸ் விமான நிலையத்தில் இதேபோன்ற கைது நடவடிக்கை இடம்பெற்றது.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காகுடிநுழைவுஅமலாக்கம்கைதுகண்டனம்