‘சாரா’ சூறாவளி: கடும் மழைக்கு ஆயத்தமாகும் மத்திய அமெரிக்கா

1 mins read
89221b78-73af-4236-9e8a-dc7135bbcfc3
‘சாரா’ சூறாவளி ஹோண்டுராசில் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய, பேரிழவை ஏற்படுத்தக்கூடிய திடீர் வெள்ளத்தையும் மண்சரிவுகளையும் ஏற்படுத்தும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.  - படம்: பிக்சாபே

சான் ஹோசெ: ‘சாரா’ சூறாவளி ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தைக் கையாள மத்திய அமெரிக்க நாடுகள் ஆயத்தமாகிவருகின்றன.

அந்தச் சூறாவளியால் முதலில் பாதிக்கப்படும் நாடு ஹோண்டுராஸ் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘சாரா’ சூறாவளி ஹோண்டுராசின் வடக்குக் கடலோரப் பகுதியை நோக்கி, மணிக்கு 16 கிலோமீட்டர் வேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது. அடுத்த சில நாள்களில் அது வலுவிழக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமெரிக்க தேசிய சூறாவளி நிலையம் கூறியது.

‘சாரா’ சூறாவளி ஹோண்டுராசில் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய, பேரிழவை ஏற்படுத்தக்கூடிய திடீர் வெள்ளத்தையும் மண்சரிவுகளையும் ஏற்படுத்தும் என்று நிலையம் முன்னுரைத்துள்ளது. அதன் பிறகு, வரும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 17) அது பெலிசை நோக்கிச் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டது.

அடுத்த சில நாள்களில், மொத்த மழை அளவு 25 முதல் 51 செண்டிமீட்டர் வரை இருக்கும் என்று நிலையம் முன்னுரைத்துள்ளது.

அடுத்த வாரத் தொடக்கத்தில், அச்சூறாவளி ‘எல் செல்வடோர்’, கிழக்கு குவாத்தமாலா, மேற்கு நிகாராகுவா, தென் மெக்சிகோவில் உள்ள கிந்தானா ரூ மாநிலம் ஆகியவற்றைத் தாக்கும் என்று நிலையம் முன்னுரைத்துள்ளது.

இந்நிலையில், ஹோண்டுராசின் வடப் பகுதியில் சிவப்பு எச்சரிக்கை நிலை விடுக்கப்பட்டுள்ளது. பேரழிவை ஏற்படுத்தக்கூடிய கடும் மழைக்கு ஆயத்தமாக, மற்ற நாடுகள் அவசர நடவடிக்கைகளைச் செயல்படுத்தியுள்ளன.

குறிப்புச் சொற்கள்