4.5% பொருளியல் வளர்ச்சியை எதிர்பார்க்கும் இலங்கை மத்திய வங்கி

1 mins read
850aafdc-6a81-4b85-afe3-410f59f06309
வெளிநாடுகளின் தேவைகள், மாறிவரும் உலகளாவியப் பொருளியல் சூழல் ஆகியவை பொருளியல் வளர்ச்சி தொடர்பான நிலையற்ற தன்மையை மோசமடையச் செய்வதாக இலங்கை மத்திய வங்கி கவலை தெரிவித்தது. - படம்: இணையம்

கொழும்பு: இலங்கையின் பொருளியல் இவ்வாண்டு 4.5 விழுக்காடு வளர்ச்சி காணும் என்று அந்நாட்டின் மத்திய வங்கி முன்னுரைத்துள்ளது.

பொருளியல் மந்தநிலையிலிருந்து மீண்டு வர இலங்கை மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு அமெரிக்க வரிவிதிப்பு சில பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்றபோதிலும் பொருளியல் மேம்படும் என்று மத்திய வங்கி எதிர்பார்க்கிறது.

இலங்கையின் பொருளியல் இவ்வாண்டு 3.5 விழுக்காடு உயரும் என்று உலக வங்கி முன்னுரைத்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் முன்னுரைப்பு அதைவிட அதிகமாக உள்ளது.

அனைத்துலகப் பண நிதியத்தின் 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் திட்டத்தின் ஆதரவுடன் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2024ஆம் ஆண்டில் 5 விழுக்காடு கூடியது.

பொருளியல் வளர்ச்சி முன்னுரைக்கப்பட்டுள்ளபோதிலும் சில அபாயங்கள் இருப்பதை இலங்கை மத்திய வங்கி சுட்டியது.

வெளிநாடுகளின் தேவைகள், மாறிவரும் உலகளாவிய பொருளியல் சூழல் ஆகியவை பொருளியல் வளர்ச்சி தொடர்பான நிலையற்றதன்மையை மோசமடையச் செய்வதாக அது கவலை தெரிவித்தது.

இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்கா கடந்த மாதம் 20 விழுக்காடு வரி விதித்தது.

முதலில் 44 விழுக்காடு வரி விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வரியைக் குறைக்க அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை இலங்கை தொடர்கிறது.

இலங்கையில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரிக்கும் என்று இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்