மத்திய ஜாவா நிலச்சரிவு: மீட்புப் பணிகள் தொடர்கின்றன

1 mins read
4c0e5295-6cad-4cb3-93d5-4bfa2a029884
நிலச்சரிவில் குறைந்தது 17 பேர் மாண்டனர். - படம்: இபிஏ

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் மத்திய ஜாவாவில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாகக் குறைந்தது 17 பேர் மாண்டனர்.

இந்நிலையில், நிலச்சரிவில் காணாமல் போன 13 பேரைத் தேடும் பணிகள் தொடர்வதாக புதன்கிழமையன்று (ஜனவரி 22) அதிகாரிகள் தெரிவித்தனர்.

கனமழை காரணமாக மத்திய ஜாவாவில் உள்ள பெக்காலோங்கான் பகுதியில் செவ்வாய்க்கிழமையன்று (ஜனவரி 21) நிலச்சரிவு ஏற்பட்டது.

ஏறத்தாழ 300 மீட்புப் பணியாளர்கள் புதன்கிழமை காலை (ஜனவரி 22) மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

அவர்களுக்கு உதவியாக காவல்துறையினரும் ராணுவத்தினரும் செயல்பட்டனர்.

காணாமல் போனவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

நிலச்சரிவு ஏற்பட்ட இடத்துக்கு அருகில் உணவகம் ஒன்று இருந்ததே இதற்குக் காரணம்.

நிலச்சரிவு ஏற்பட்டபோது அந்த உணவகத்தில் மேலும் பலர் இருந்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

மேலும் அவ்விடம் சுற்றுப்பயணிகளிடையே பிரபலமான இடம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

நிலச்சரிவு காரணமாகச் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் மீட்புப் பணியாளர்கள் ஏறத்தாழ கிட்டத்தட்ட நான்கு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று சம்பவ இடத்தை அடைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

நிலச்சரிவில் சாலைகள் , வீடுகள், வயல்கள் ஆகியவை மண்ணில் புதையுண்டன.

அடுத்த சில நாள்களில் அப்பகுதியில் கனமழை பெய்யும் என்றும் மேலும் பல நிலச்சரிவுகள், திடீர் வெள்ளம் ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்