மேன்ஹேட்டனில் குறிவைத்துக் கொல்லப்பட்ட தலைமை நிர்வாக அதிகாரி

2 mins read
6a422ea2-f847-42f3-be43-e5c37c1a2f7f
யுனைடெட்ஹெல்த்கேர் தலைமை நிர்வாக அதிகாரி பிராயன் தாம்சன் சுட்டுக் கொல்லப்பட்ட ஹில்டன் ஹோட்டலுக்கு வெளியே அதிகாரிகள் ஆதாரங்களை ஆராய்கின்றனர். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

நியூயார்க்: யுனைடெட்ஹெல்த் நிறுவனத்தின் காப்புறுதிப் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி பிராயன் தாம்சன், 50, புதன்கிழமை காலை சுட்டுக் கொல்லப்பட்டார்.

துப்பாக்கிக்காரன் பதுங்கிக் காத்திருந்து அவரைச் சுட்டான் என்றும் இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேன்ஹேட்டனின் சிக்ஸ்த் அவென்யூவில் உள்ள ஹில்டன் ஹோட்டலுக்கு வெளியே, நிறுவனத்தின் வருடாந்தர முதலீட்டு மாநாட்டுக்குச் சற்று முன்பாகத்தான் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட தாம்சன் உயிரிழந்துவிட்டார் எனப் பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது.

இதற்கிடையே, துப்பாக்கிக்காரன் இன்னும் தேடப்பட்டு வருவதாகவும் இத்தாக்குதலின் பின்னணியில் உள்ள நோக்கம் குறித்து விசாரித்து வருவதாகவும் அதிகாரிகள் கூறினர்.

“இது தற்செயலாக நடந்த ஒரு வன்முறைச் செயலாகத் தெரியவில்லை. திட்டமிட்டு, குறிவைத்து நடத்தப்பட்ட ஒரு தாக்குதல் என அனைத்து அறிகுறிகளும் இச்சம்பவத்தில் உள்ளன,” என்று நியூயார்க் நகரின் காவல்துறை ஆணையர் ஜெசிக்கா டிஷ் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

முகமூடி அணிந்தவாறு சாம்பல் நிற தோள்பையைத் தூக்கியிருந்த சந்தேக நபர், முதலில் ஓட்டம் பிடித்த பின்னர் மின்சார சைக்கிள் ஒன்றை ஓட்டித் தப்பிச் சென்றதாகக் காவல்துறையினர் கூறினர்.

கிறிஸ்துமஸ் மரத்தின் விளக்குகளை ஏற்றும் வருடாந்தர நிகழ்வு, சில கட்டடங்கள் தள்ளியே நடைபெறவிருந்த நிலையில் இத்தாக்குதல் நடந்துள்ளது.

தாம்சனுக்கு முன்னதாக மிரட்டல்கள் வந்ததாக என்பிசி செய்தி நிறுவனத்திடம் இறந்தவரின் மனைவி பொலேட் கூறினார்.

மில்லியன்கணக்கான அமெரிக்கர்களுக்குப் பலனளித்து வரும் ஆகப் பெரிய அமெரிக்கச் சுகாதாரக் காப்புறுதி நிறுவனமாக யுனைடெட்ஹெல்த் திகழ்கிறது. அதன் யுனைடெட்ஹெல்த்கேர் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரியாக 2021ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தாம்சன் இருந்து வந்தார்.

குறிப்புச் சொற்கள்