அமெரிக்காவின் ஆகப்பெரிய நகரமான நியூயார்க் மேயர் தேர்தலில் ஸோரான் மம்தானி வெற்றி பெற்றுள்ளார். இவரது வெற்றி, அதிபர் டிரம்ப்புக்கும் அவரது குடியரசுக் கட்சிக்கும் சவாலாக அமைந்துள்ளது.
மம்தானி வெற்றி பெற்றால் நியூயார்க் நகருக்கான மத்திய அரசாங்க நிதி நிறுத்தப்படும் என்று முன்னதாக அதிபர் டிரம்ப் மிரட்டியிருந்தார்.
ஆனால், மம்தானியின் வெற்றியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.
அமெரிக்காவின் நிதி மையாகவும் உள்ள நியூயார்க்கின் மேயர் தேர்தலில் முன்னாள் ஆளுநர் ஆண்ட்ரு குவோமோவும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த கர்ட்டிஸ் ஸ்லிவாவும் போட்டியிட்டனர். இருவரையும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஸோரான் மம்தானி, 34, தோற்கடித்துள்ளார்.
திரு ஸோரான் மம்தானி, நியூயார்க் மேயர் தேர்தலில் வெற்றிபெற்ற முதல் முஸ்லிம், ஆசிய அமெரிக்கர் ஆவார்.
1892க்குப் பிறகு நியூயார்க்கில் வெற்றிபெற்ற ஆக இளையரும் 34 வயது மம்தானியே.
மேயர் தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு பேசிய மம்தானி, “நியூயார்க் மக்களே! நகரத்தின் பெரிய மாற்றத்திற்கும் அரசியல் மாற்றத்திற்கும் நீங்கள் வாக்களித்துள்ளீர்கள். புதிய நகரமாக மீண்டும் பிறந்துள்ள நியூயார்க்கின் காற்றை நாம் அனைவரும் சுவாசிக்கிறோம். அனைவருக்கும் நன்றி,” என்றார்.
நியூயார்க் நகரத்தில் 125 பில்லியனர்கள் குடியிருக்கின்றனர். உலகின் ஆகப்பெரிய பங்குச் சந்தையும் ஜேபிமோர்கன் சேஸ் போன்ற உலகின் முன்னணி வங்கிகளும் அந்நகரத்தில் செயல்படுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
மம்தானி சில சர்ச்சைக்குரிய சலுகைகளை அறிவித்துள்ளார்.
நியூயார்க் நகரத்தை உழைக்கும் மக்களுக்குக் கட்டுப்படியான இடமாக வைத்திருப்பது, வாடகைகளை முடக்குவது, இலவசப் பேருந்து, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசப் பராமரிப்புச் சேவை போன்றவை அவற்றில் அடங்கும்.
உகாண்டாவில் பிறந்த இவர், ஏழு வயதில் நியூயார்க்கில் குடியேறி 2018ல் அமெரிக்க குடியுரிமையைப் பெற்றவர். இவரின் பெற்றோர் ஹார்வர்ட் பல்கலைக்கழகப் பட்டதாரிகள். இவரது தாயாரான மீரா நாயர் திரைப்படத் தயாரிப்பாளர். இவரது தந்தை மஹ்முத் மம்தானி, கொலம்பியா பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்.
நியூயார்க் நகர மேயர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வெற்றியைத் தொடர்ந்து வெர்ஜீனியா, நியூஜெர்சியிலும் ஆளுநர் தேர்தல்களில் ஜனநாயகக் கட்சி வாகை சூடியிருக்கிறது.

