கோலாலம்பூர்: ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்தில் வித்தியாசமான சவால்களும் வாய்ப்புகளும் உள்ளன என்று மலேசியாவின் பொருளியல் அமைச்சர் ரபிசி ரம்லி தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஷென்சென், சூசோ போன்ற பொருளியல் வட்டாரங்களை அடிப்படையாகக் கொண்டு தொடங்கப்பட்டது ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலம் என்றார் அவர்.
ஷென்சென், சூசோ உள்நாட்டு பகுதிகள் ஒரே நாட்டுக்குகீழ் உள்ளது. ஆனால் ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலம் இரண்டு நாடுகள் தொடர்புடையது. இரு நாட்டு சட்டங்கள், விதிமுறைகள் வேறுபடுகின்றன. அது சவாலாக இருக்கும் என்றார் திரு ரம்லி.
இருப்பினும் ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்திற்கு என தனிச் சிறப்பு உண்டு. அது முதலீடுகளை பெற மிகப் பெரும் ஆதரவாக இருக்கும் என்று அவர் கூறினார்.
“உலக புவிசார் அரசியல் நிலவரம் நிச்சயமற்ற பொருளியல் சூழல் போன்ற காரணங்களால் ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய விருப்பப்படுகின்றன. அதனால் நிறுவனங்களின் விநியோக சங்கில்த் தொடர், உற்பத்தி போன்றவை பாதிக்கப்படாது,” என்று ரம்லீ தெரிவித்தார்.
மலேசியாவின் ஜோகூர் மாநில தென்பகுதியில் 3,571 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலம் அமைந்துள்ளது.
இது சிங்கப்பூரின் பரப்பளவைவிட நான்கு மடங்கு பெரிது.
சிறப்புப் பொருளியல் மண்டலம் ஜோகூர் பாரு நகர மையம், இஸ்கந்தர் புத்ரி, ஃபாரஸ்ட் சிட்டி, பெங்கராங் ஒருங்கிணைக்கப்பட்ட பெட்ரோலிய வளாகம், பொந்தியான், கூலாய் என ஒன்பது முக்கிய உட்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்திற்கு முதற்கட்டமாக 5 பில்லியன் ரிங்கிட் பெறுமான உள்ளமைப்பு மேம்பாட்டுத் திட்டத்திற்கு மலேசியா பரிந்துரை செய்துள்ளதாக திரு ரபிசி கூறியுள்ளார்.
அந்த நிதி மலேசியாவின் 2025ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்றும் அவர் சொன்னார்.
மத்திய, மாநில அரசாங்கங்களுக்கு இடையே பல்வேறு அடுக்குகள் இருப்பதால், சவால் இயங்குமுறையில் உள்ளதே தவிர நிதியில் அல்ல என்றார் அவர்.

