ஓஸ்லோ: நார்வேயின் வருங்கால அரசியாரின் மகன்மீது பாலியல் வன்கொடுமை, தாக்குதல் எனத் தொடர் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
அதன் காரணமாக நார்வே அரசக் குடும்பம் அதன் ஆகப் பெரிய பிரச்சினையில் சிக்கிக்கொண்டுள்ளது.
மாரியஸ் போர்க் ஹொய்பியைச் சூழும் சட்டப் பிரச்சினைகள் குறித்து கடந்த ஆகஸ்ட்டிலிருந்து நார்வேயில் அதிகமாகப் பேசப்பட்டு வருகின்றது.
கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி, அவர் ஓஸ்லோவில் கைதுசெய்யப்பட்டார். அதற்கு முந்தைய நாள், தமது காதலியைத் தாக்கியதாக அவர் மீது சந்தேகிக்கப்பட்டது.
அந்தக் காதலியின் வீட்டுச் சுவரில் கத்தி ஒன்று சொருகப்பட்டிருந்த புகைப்படம் ஊடகத்தில் வெளிவந்தது. சில நாள்களுக்குப் பிறகு, திரு ஹொய்பி அந்தக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். கொக்கைன், மது உட்கொண்டிருந்த நேரத்தில் வாக்குவாதம் ஏற்பட்டதாக அவர் கூறினார்.
தாம் நீண்டகாலமாகப் போதைப்பொருள் புழக்கத்தையும் மனநலப் பிரச்சினைகளையும் எதிர்த்துப் போராடி வருவதாக அவர் சொன்னார்.
இதற்கிடையே, திரு ஹொய்பியின் இரண்டு முன்னாள் காதலிகளும் முன்வந்து தங்களை அவர் தாக்கியதாகக் கூறியுள்ளனர்.
டிசம்பர் மாதத்துக்குள், கொலை மிரட்டல்கள், பாலியல் வன்கொடுமை, கட்டுப்பாட்டு உத்தரவை மீறியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுடனும் அவருக்கும் தொடர்பு இருப்பதாக காவல்துறை சந்தேகித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
“குற்றச்சாட்டுகள் அடுக்கிக்கொண்டே போகின்றன. நார்வே அரசக் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள ஆகப் பெரிய களங்கம் இது,” என்று ‘டாக்ப்லாடெட்’ (Dagbladet) நாளிதழின் எழுத்தாளரான சிக்ரிட் ஹுவிட்ஸ்டன் கூறினார்.


