ஈரான் போரால் விமானச் சேவைகளில் மாற்றங்கள்

பயண நிலவரங்களைச் சரிபார்க்க பயணிகளுக்கு அறிவுறுத்தல்

ஈரான் போரால் விமானச் சேவைகளில் மாற்றங்கள்

2 mins read
630b9858-6ea7-4c15-90ab-b2643facff82
பல முன்னணி விமான நிறுவனங்கள் மேற்கு ஆசிய இலக்குகளுக்கான தங்களின் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தியும் ரத்து செய்தும் மாற்றியமைத்தும் அறிவித்துள்ளதாக மலேசியப் பொது விமானப் போக்குவரத்து ஆணையம் கூறியுள்ளது. - கோப்புப் படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

புத்ராஜெயா: மத்திய கிழக்கில் நிலவிவரும் பாதுகாப்புச் சூழல் காரணமாக, அனைத்துலக விமானச் சேவைகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதன் காரணமாக, மத்திய கிழக்குக்குச் செல்லும், அங்கிருந்து வரும் அல்லது அவ்வழியாக இடைமாற்றம் செய்யும் பயணிகள் அனைவரும் தங்களின் பயண நிலவரங்களைச் சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களிடம் நேரடியாகக் கேட்டுச் சரிபார்த்துக்கொள்ளுமாறு மலேசியப் பொது விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

பாதுகாப்பு நிலவரத்தைக் கருத்தில்கொண்டு விமானச் சேவைகளின் பாதைகள் மாற்றப்படலாம்; அல்லது பயணக் கால அட்டவணைகள் திருத்தப்படலாம் என்று அது கூறியது.

சில குறிப்பிட்ட சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளது. இத்தகைய செயல்பாட்டு மாற்றங்களால் பயண நேரம் அதிகரிப்பதுடன், தாமதங்கள் அல்லது இணைப்பு விமானச் சேவைகளிலும் இடையூறுகள் நேரலாம்.

ஏற்கெனவே பல முன்னணி விமான நிறுவனங்கள் மேற்கு ஆசிய இலக்குகளுக்கான தங்களின் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தியும் ரத்து செய்தும் மாற்றியமைத்தும் அறிவித்துள்ளன.

குறிப்பாகப் பிரிட்டிஷ் ஏர்வேஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், எமிரேட்ஸ், கேஎல்எம், ஏர் பிரான்ஸ் ஆகிய முக்கிய விமான நிறுவனங்கள் தங்களுடைய சேவை இடைநிறுத்தங்களை 2026ஆம் ஆண்டின் ஆகஸ்ட் பிற்பகுதி, செப்டம்பர் அல்லது அக்டோபர்வரை நீட்டித்துள்ளன.

மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் கோலாலம்பூர் - தோஹா இடையிலான அன்றாட விமானச் சேவை வழக்கம்போல் இயங்கும். இருப்பினும், தோஹாவிற்கான ஏனைய சேவைகள் அக்டோபர் 24ஆம் தேதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அதேபோல, ஏர்ஆசியா எக்ஸ் நிறுவனம் ஆகஸ்ட் 27ஆம் தேதி தொடங்கவிருந்த கோலாலம்பூர் - பஹ்ரேன் - லண்டன் கெட்விக் விமானச் சேவையை 2027 மார்ச் மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளது.

பயண ஏற்பாடுகளில் குறுகிய காலத்தில் மாற்றங்கள் செய்யப்படக்கூடும் என்பதால், பயணிகள் தங்களின் விமான நிறுவனங்கள், சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகள், தூதரகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து ஆணையங்கள் வெளியிடும் ஆகப் புதிய அதிகாரபூர்வ அறிவிப்புகளைக் கவனித்துச் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்புச் சொற்கள்
உலகம்மலேசியாவிமானச் சேவைஈரான் போர்மத்திய கிழக்குபாதிப்பு