சிட்னி: ஆஸ்திரேலியாவின் மலிவுக் கட்டண விமானச் சேவையான ஜெட்ஸ்டார் அதன் விமானங்களில் இருக்கைக்குமேல் பயணப்பெட்டி வைக்கும் இடத்தைப் பயன்படுத்த இனி பயணிகள் கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும்.
வரும் 2027ஆம் ஆண்டிலிருந்து ஜெட்ஸ்டார் இதற்குக் கட்டணம் விதிக்கவுள்ளது.
பொதுவாகவே மலிவுக் கட்டண விமானத் துறையில் பயணத்தின்போது எல்லா அம்சங்களுக்கும் கட்டணம் விதிக்கும் போக்கு தற்போது காணப்பட்டுவருகிறது. ஜெட்ஸ்டார் விதிக்கும் இந்தக் கட்டணம் அந்தப் போக்குக்கு ஏற்றவாறு அமைவதாகக் கூறப்படுகிறது.
ஜெட்ஸ்டாரின் புதிய விதிமுறைகளின்படி, ஒவ்வொரு பயணிக்கும் இருக்கைக்குக்கீழ் ஒரு பெட்டியை வைக்க அனுமதி வழங்கப்படும். பேக்பேக் (backpack), கைப்பை, மடிக்கணினிப் பை போன்றவை அத்தகைய பைகளில் அடங்கும் என்று ஜெட்ஸ்டார் புதன்கிழமை (ஆகஸ்ட் 5) அறிக்கை மூலம் தெரிவித்தது.
அதற்கும் மேல் கூடுதலான பெட்டிகளை விமானத்தில் எடுத்துச்செல்ல விரும்பும் பயணிகள் அதற்கென ‘பிரையோரிட்டி கேரி-ஆன்’ (Priority Carry-on) எனப்படும் இடத்தை கட்டணம் செலுத்திப் பயன்படுத்திக்கொள்ளலாம். அதன் மூலம் பெரிதாக இருக்கும் இரண்டாம் பெட்டியைப் பயணிகள் இருக்கைக்குமேல் உள்ள பகுதியில் வைத்துக்கொள்ளலாம்.
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இது நடப்புக்கு வருகிறது. இரண்டாம் பெட்டியை வைப்பதற்கான இடத்தை வாங்குவதற்கான கட்டணம் 25 ஆஸ்திரேலிய டாலரிலிருந்து (23 வெள்ளி) தொடங்கும்.


