வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பிற்கு மிகவும் நெருக்கமானவரும் அந்நாட்டின் வலதுசாரி ஆர்வலருமான சார்லி கிர்க் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அமெரிக்க நேரப்படி புதன்கிழமை (செப்டம்பர் 10) அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தில் உள்ள யூட்டா வெலி பல்கலைக்கழகத்தில், நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கிர்க் உரையாற்றிக்கொண்டிருந்தபோது துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
திரு கிர்க்கின் கழுத்தில் குண்டு பாய்ந்ததாக அதிகாரிகள் கூறினர்.
இதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் வலம் வந்தது.
நிகழ்ச்சியில் ஏறத்தாழ 3,000 பேர் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
துப்பாக்கியால் சுட்டவரின் அடையாளத்தை அமெரிக்க அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை.
சந்தேக நபர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அமெரிக்க புலனாய்வுத்துறை இயக்குநர் கேஷ் பட்டேல் தெரிவித்தார்.
விசாரணை தொடர்வதாகவும் இச்சம்பவம் தொடர்பான விவரங்கள் வெளிப்படைத்தன்மையுடன் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
திரு கிர்க்கின் படுகொலை அரசியல் நோக்கமுடையது என்று யூட்டா மாநிலத்தின் ஆளுநர் கூறியுள்ளார்.
திரு கிர்க்கிற்கு மரியாதை செலுத்தும் வகையில் அமெரிக்கக் கொடி செப்டம்பர் 14ஆம் தேதி வரை அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும் என்று அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

