கோலாலம்பூர்: மலேசியர்கள் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் RON95 ரகப் பெட்ரோலை மேலும் குறைந்த விலையில் பெறவுள்ளனர்.
தற்போது ஒரு லிட்டர் RON95 பெட்ரோல் 2.05 ரிக்கிட்டுக்கு விற்கப்படுகிறது. செப்டம்பர் 30ஆம் தேதி முதல் அது 1.99 ரிங்கிட்டுக்கு (60 காசு) விற்கப்படும்.
புதிய அறிவிப்பின் படி மலேசியர்கள் RON95 ரகப் பெட்ரோலைத் தங்களது தேசிய அடையாள அட்டையான MyKad-ஐ காண்பித்து வாங்கலாம்.
RON95 பெட்ரோல் மலேசிய வாகனங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். வெளிநாட்டு வாகனங்கள் அதைப் பயன்படுத்தக்கூடாது.
அதேபோல் மலேசிய வாகனங்களை ஓட்டும் வெளிநாட்டவர்களுக்கு ஒரு லிட்டர் RON95 பெட்ரோல் 2.60 ரிக்கிட்டுக்கு விற்கப்படும்.
சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாட்டுப் பதிவு எண் கொண்ட வாகனங்கள் RON97 ரகப் பெட்ரோலை மட்டுமே வாங்க முடியும். ஒரு லிட்டர் RON95 பெட்ரோல் 3.21 ரிங்கிட்டுக்கு விற்கப்படுகிறது.
பெட்ரோல் விலை குறைப்பு குறித்து மலேசியப் பிரதமரும் நிதி அமைச்சருமான அன்வார் இப்ராகிம் திங்கட்கிழமை (செப்டம்பர் 22) அறிக்கை வெளியிட்டார்.
RON95 ரகப் பெட்ரோலை அனைத்து மலேசியர்களும் வாங்கிக்கொள்ளலாம். மலேசிய மக்களுக்குக் கொடுக்கும் அன்பளிப்பு இது என்றார் திரு அன்வார்.
தொடர்புடைய செய்திகள்
புதிய அறிவிப்பின்படி ஒரு மலேசியர் மாதம் 300 லிட்டர் வரை RON95 ரகப் பெட்ரோலை வாங்கிக்கொள்ளலாம்.
உணவு விநியோகம், இணையத்தில் விற்கப்படும் பொருள்களை விநியோகம் செய்யும் இணைய ஊழியர்களுக்குக் கூடுதல் பெட்ரோல் வழங்கப்படும். அதற்கு அந்த ஊழியர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இணைய ஊழியர்கள் சராசரியாக மாதம் 700 லிட்டர் பெட்ரோலுக்கு மேல் பயன்படுத்துகிறார்கள் அதனால் அந்த வரம்பை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
எரிபொருள்களுக்கு நல்ல மானியம் வழங்கி வந்த மலேசிய அரசாங்கம் அண்மையில் அந்த மானியங்களைச் சுகாதாரம், கல்வி, உதவித்திட்டம், கட்டமைப்பு உள்ளிட்டவற்றுக்குப் பயன்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது.