ஜார்ஜ் டவுன்: சென்னை-பினாங்கு இடையே சனிக்கிழமை (டிசம்பர் 21) தொடங்கப்பட்ட நேரடி இண்டிகோ விமானச் சேவை, வட்டார விமானப் போக்குவரத்து நடுவமாக பினாங்கின் நிலையை உறுதிப்படுத்துவதில் முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது.
சுற்றுப்பயண ஊக்குவிப்பு முயற்சிகளைத் தீவிரப்படுத்த 2025 தொடக்கத்தில் இந்தியாவின் முக்கிய நகர்களுக்குச் செல்ல தாம் திட்டமிட்டிருப்பதாக சுற்றுப்பயண, புத்தாக்கப் பொருளியல் குழுத் தலைவர் வோங் ஹொன் வாய் கூறினார்.
“அனைத்துலக வர்த்தக, மாநாடுகளுக்கு பினாங்கு ஏற்கெனவே ஒரு சிறந்த தேர்வாக விளங்குகிறது. ஒத்துழைப்புக்கு புதிய வழிகளை ஆராயவும் தொடர்ந்து வாய்ப்புகளை விரிவுபடுத்தவும் நாங்கள் விரும்புகிறோம்,” என்று அவர் வெளியிட்ட ஓர் அறிக்கையில் சொன்னார்.
சென்னை-பினாங்கு பயணப் பாதை, இந்தியாவுக்கும் பினாங்கிற்கும் இடையே விமானப் போக்குவரத்தை வலுப்படுத்துவது மட்டுமின்றி, இந்தியாவின் வேகமாக வளர்ந்துவரும் சந்தையைச் சென்றடைவதில் உத்திபூர்வ பாலமாகவும் திகழும் என்று திரு வோங் நம்பிக்கை தெரிவித்தார்.
பேராக், கெடா, பெர்லிஸ் போன்ற மலேசியாவின் வடமாநிலங்களைச் சேர்ந்த பயணிகள் சென்னை சென்று வர இந்தப் பயணப் பாதை வசதியை ஏற்படுத்தித் தரும்.
போயிங் 737 மேக்ஸ் விமானத்தில் இயக்கப்படும் சென்னை-பினாங்கு சேவை அன்றாடம் வழங்கப்படும்.
“சென்னை-பினாங்கு நேரடி விமானச் சேவை மூலம், இந்தியாவிலிருந்து கூடுதலான பயணிகளை பினாங்கிற்கு ஈர்க்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது,” என்றார் திரு வோங்.