கோலாலம்பூர்: மலேசியாவில் கோழிப்பண்ணைகள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்வதால் கோழி, முட்டை விலை அதிகரித்துள்ளது.
தொழிலாளர் பற்றாக்குறை, தீவன விலை உயர்வு, அரசாங்கத்தின் தீவிரமானக் கட்டுப்பாடுகள் போன்றவற்றால் கோழிப்பண்ணைகள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக கோழி இறைச்சி, முட்டைகளின் விலைகள் உயர்ந்து வருவதாகத் துறை சார்ந்தவர்கள் கூறுகின்றனர்.
இத்தகவலை நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.
மலேசிய கால்நடை வளர்ப்போர் சங்கங்களின் கூட்டமைப்பு, நாட்டின் உள்நாட்டுத் தேவையைப் பண்ணைகளால் பூர்த்தி செய்ய முடியும் என்று கூறியுள்ளது.
ஆனால் துறை சார்ந்த நெருக்கடிகளால் சந்தைக்கான விநியோகம் நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதை அது சுட்டிக்காட்டியது.
ஈக்கள் தொல்லை காரணமாக பண்ணைகள் மூடப்படுவதால் உற்பத்திப் பாதிக்கப்பட்டுள்ளதாக நம்பகமான ஆதாரம் ஒன்று கிடைத்துள்ளதாக நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.
கோழிப் பண்ணைகள், முக்கியமாக நெகிரி செம்பிலான் மாநிலத்தில் மூடப்படுகின்றன. பேராஃக், பினாங்கு, சிலாங்கூர் ஆகிய மாநிலங்களில் உள்ள பண்ணைகளும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளன.
புகார்களைத் தொடர்ந்து ஏழு பண்ணைகள் மூடப்பட்டதாகவும், ஆனால் தேவையான மேம்பாடுகளைச் செய்த பிறகு அவை மீண்டும் இயங்க அனுமதிக்கப்பட்டதாகவும் பினாங்கு கிராமப்புற வளர்ச்சி, விவசாயத் தொழில்நுட்பம், உணவுப் பாதுகாப்பு மற்றும் தொழில்முனைவோர் குழுவின் தலைவர் ரஷிடி ஸினோல் தெரிவித்தார்.
ஏறக்குறைய 3.7 மில்லியன் கோழிகளை வளர்க்கும் பாதிக்கப்பட்ட பண்ணைகளின் உரிமங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளன. சில பண்ணைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவற்றில் சில பண்ணைகள் தற்போது மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
இயற்கையான காற்றோட்டத்தை மட்டுமே நம்பியிருக்கும் திறந்தவெளிப் பண்ணைகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
பெருமளவிலான ஈக்கள், புழுக்கள் தொல்லை குறித்துப் பொதுமக்கள் அளித்த புகார்களைத் தொடர்ந்து அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மூடப்பட்ட சில பண்ணைகளால் இன்னும் செயல்பாடுகளைத் தொடங்க முடியவிலை.
வெப்ப அலை, பூச்சிக்கொல்லி மருந்து பற்றாக்குறை மற்றும் போதிய ஊழியர் இல்லாமை ஆகிய காரணங்களால் இந்த நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது.
“சந்தையில் போதுமான பூச்சிக்கொல்லி மருந்துகள் இல்லை. அதே நேரத்தில் கூடுதல் வெளிநாட்டு ஊழியர்களைக் கொண்டுவருவதற்கான ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை,” என்று அந்த ஆதாரம் கூறியது.
ஈக்கள், புழுக்கள் முற்றிலும் இல்லாத நிலைமையை உருவாக்க வேண்டும் என்ற அமலாக்கத் தரநிலைகளை எட்டப் பண்ணையாளர்கள் மிகவும் சிரமப்பட்டு வருவதாகக் கூட்டமைப்பின் ஆலோசகர் டத்தோ ஜெஃப்ரி எங் தெரிவித்தார்.
“பண்ணைகளைச் சிறப்பாகப் பராமரிக்க வேண்டுமென்றால், எங்களுக்குக் கூடுதல் தொழிலாளர்கள் தேவை,” என்றார் அவர்.
பிரச்சினைகளைச் சரிசெய்வதற்கும், மூடப்பட்ட பண்ணைகளை மீண்டும் திறப்பதற்கும் பண்ணையாளர்களுக்குத் தெளிவான வழிகாட்டுதல்களும் ஒரு நடைமுறை அமைப்பும் தேவை என்று பலரும் கூறினர்.
“அவர்கள் எதிர்பார்ப்பதைச் செய்து முடிக்க எங்களிடம் கருவிகளும் இல்லை, ஆட்களும் இல்லை. ஆனால் பண்ணைகளை மூடுமாறு உத்தரவிடப்படுகிறது. ஒரு வகையில், அவர்கள் பண்ணையாளர்களைத் தொழிலைவிட்டே மூடிவிட்டுப் போகும் நிலைக்குத் தள்ளுகிறார்கள். நாம் ஒரு மோசமான சூழ்நிலைக்குள் நுழைந்து கொண்டிருக்கிறோம்,” என்று எங் கூறினார்.
தெளிவற்ற நடைமுறைகளால் தொழிலாளர்கள் செய்வதறியாது தவிக்கக்கூடும் என்றும், இதனால் விரக்தியடையும் பண்ணை உரிமையாளர்கள் இத்துறை முழுவதையும் கைவிட்டு வெளியேறக்கூடும் என்றும் அவர் மேலும் எச்சரித்தார்.


