மலாயா தலைமை நீதிபதி: தற்காலிகப் பொறுப்பில் மேல் முறையீட்டு நீதிமன்றத் தலைவர்

2 mins read
39113a03-5e6f-4302-848d-7a0bd9b47214
திரு அபு பக்கார், மலேசியாவின் இரண்டாம் ஆக உயரிய நிலையில் உள்ள நீதிபதி. மலாயா தலைமை நீதிபதி என்பது நீதித் துறையில் மூன்றாவது ஆக உயரிய பதவி.  - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் அபு பக்கார், மலாயா தலைமை நீதிபதியின் பொறுப்புகளைத் தற்காலிகமாக ஏற்றுள்ளார். சென்ற வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) திருவாட்டி ஹஸ்னா முகம்மது ஹ‌ஷிம் ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து அவர் புதிய பொறுப்பை ஏற்றார்.

திரு அபு பக்கார், மலேசியாவின் இரண்டாம் ஆக உயரிய நிலையில் உள்ள நீதிபதி. மலாயா தலைமை நீதிபதி என்பது நீதித் துறையில் மூன்றாவது ஆக உயரிய பதவி.

அந்தப் பொறுப்பில் திரு அபு பக்காரை நியமிப்பதாக நாட்டின் தலைமை நீதிபதி வான் அகமது ஃபாரிட் வான் சாலே வெள்ளிக்கிழமை எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இன்னொருவர் நியமிக்கப்படும்வரை திரு அபு பக்கார் புதிய பதவியில் நீடிப்பார் என்று அவர் சொன்னார்.

அந்தக் கடிதம் உண்மையானதுதான் என்பதை நம்பத்தகுந்த வட்டாரமொன்று மலாய் மெயிலிடம் உறுதிசெய்தது.

திருவாட்டி ஹஸ்னா, மலேசியாவில் நீதிபதிகள் கட்டாய ஓய்வுபெறும் வயதான 66ஐ இவ்வாண்டு (2025) மே மாதம் 15ஆம் தேதி எட்டினார். ஆயினும் மத்திய அரசமைப்புச் சட்டப்படி, அவரின் பதவிக்காலம் ஆறு மாதத்திற்கு அதாவது நவம்பர் 15ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது.

நவம்பர் 14ஆம் தேதி, திருவாட்டி ஹஸ்னாவின் பணியில் இறுதி நாள்.

அவருக்கு அடுத்து நிரந்தரமாக அந்தப் பதவியில் யார் வரப்போகிறார் என்பது இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

மலாயா தலைமை நீதிபதியாக இருப்பவர், நாட்டின் உயர் நீதிமன்றத்திற்குத் தலைமை தாங்குவார். தீபகற்ப மலேசியாவில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பணிகளை அவர் மேற்பார்வையிடுவார்.

குறிப்புச் சொற்கள்