மலேசியாவில் அதிக வெப்பத்தால் சிறுவர் ஒருவர் உயிரிழப்பு

மலேசியாவில் அதிக வெப்பத்தால் சிறுவர் ஒருவர் உயிரிழப்பு

2 mins read
bbea17af-2c30-4809-99e4-d3de309cb320
கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள மலேசியா. - படம்: மலாய் மெயில்

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் அதிக வெப்பத்தால் மொத்தம் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; அவர்களில் உயிரிழந்த சிறார் ஒருவரும் அடங்குவார்.

மலேசியாவின் சுகாதார அமைச்சு இத்தகவல்களைத் தெரிவித்தது. இவ்வாண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து இம்மாதம் 24ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் 11 பேர், அதிக வெப்பத்தால் கடும் சோர்வுக்கு ஆளானதாகவும் மூவர் வெப்பத் தாக்கத்துக்கு ஆளானதாகவும் அமைச்சு அறிக்கை மூலம் தெரிவித்தது.

“வெப்பத் தாக்கத்துக்கு ஆளான ஒருவரைத் தவிர அனைவரும் குணமடைந்துவிட்டனர். அந்த சிறுவர் வாகனத்தில் சிக்கிக்கொண்டது பெற்றோருக்குத் தெரியவில்லை. அதனால் அவர் வெப்பத் தாக்கத்துக்குப் பலியானார்,” என்று அமைச்சு புதன்கிழமை (மார்ச் 25) குறிப்பிட்டது.

அதிக வெப்பநிலை மோசமான சுகாதாரக் கேடுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் அமைச்சு எச்சரித்தது. சுகாதார ரீதியாக இலேசான பிரச்சினைகள் முதல் உயிரைப் பறிக்கக்கூடிய சிக்கல்கள் வரை ஒருவர் எதிர்நோக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

சிறார், வயதானவர்கள், நாள்பட்ட நோய்களுக்கு ஆளானவர்கள், வெப்பமான சூழல்களில் வேலை செய்பவர்கள், வெப்பநிலை அதிகமாக இருக்கும்போது விளையாட்டுகளில் ஈடுபடுபவர்கள் போன்றோருக்கு வெப்பம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகம் என்றும் அமைச்சு சுட்டியது.

இந்நிலையில், மலேசியாவில் வெப்பநிலை அதிகமாக இருந்து வருவதால் அதனை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு அந்நாட்டுப் பள்ளிகளைக் கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. ஒரு வாரகால விடுமுறைக்குப் பிறகு மலேசியப் பள்ளிகள் அடுத்த வாரம் மீண்டும் திறக்கப்படவுள்ளன.

வெப்பநிலை அதிகமாக இருக்கும்போது மாணவர்களும் ஆசிரியர்களும் பள்ளி ஊழியர்களும் எளிமையான விளையாட்டு ஆடைகளை அணியக் கல்வி நிலையங்கள் சிறப்பு அனுமதி வழங்கவேண்டும் என்று அமைச்சு சொன்னது. கல்வி நிலையங்களில் அந்தந்த நேரத்தில் இருக்கும் தேவைகளுக்கும் சூழலுக்கும் ஏற்ப அனுமதி வழங்குமாறு அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

வெப்பநிலை 35 டிகிரி செல்சியசைத் தாண்டினால் எல்லா வெளளிப்புற நடவடிக்கைகளையும் ஒத்திவைப்பது, போதுமான குடிநீர் இருப்பதை உறுதிசெய்வது மற்றும் போதுமான அளவு நீர் அருந்துமாறு மாணவர்களுக்கு நினைவூட்டுவது போன்ற நடவடிக்கைகளைக் கல்வி நிலையங்கள் கட்டாயம் எடுக்கவேண்டும் என்றும் கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்