சிறார் பாலியல் வன்கொடுமை: பிரபல சமய போதகருக்கு 24 ஆண்டு சிறை, பிரம்படி

சிறார் பாலியல் வன்கொடுமை: பிரபல சமய போதகருக்கு 24 ஆண்டு சிறை, பிரம்படி

2 mins read
1fb471c0-e905-4d02-8502-7dcd8f3a1bce
பியு அஸ்மான் என்று பரவலாக அழைக்கப்படும் பிரபல சமய போதகர் அஸ்மான் சியா. - படம்: மலேசிய ஊடகம்

பெட்டாலிங் ஜெயா: பிரபல சமய போதகர் அஸ்மான் சியாவுக்கு சிறார் பாலியல் வன்கொடுமைக் குற்றத்திற்காக 24 ஆண்டு சிறைத் தண்டனையும் இரண்டு பிரம்படிகளும் விதிக்கப்பட்டு உள்ளன.

இரு குற்றச்சாட்டுகளுக்காக விதிக்கப்பட்ட தண்டனை காலத்தை அடுத்தடுத்து நிறைவேற்ற அமர்வு நீதிபதி நூரிடா ஆடம் உத்தரவிட்டார்.

ஒரு குற்றத்திற்கு 12 ஆண்டு சிறை, ஒரு பிரம்படி. மற்றொரு குற்றத்திற்கும் அதே தண்டனை விதிக்கப்பட்டது.

பியு அஸ்மான், 43, என்று அழைக்கப்படும் அந்த போதகர், ஈராண்டுகளுக்கு முன்னர் 17 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்ட தீர்ப்பில் அந்தத் தண்டனை அறிவிக்கப்பட்டது.

கிள்ளான்னில் கம்போங் சுங்கை உடாங்கில் உள்ள சிறுவர் இல்லத்தில் 2022 பிப்ரவரி 20 நள்ளிரவு 12.15 மணியளவிலும் 2022 ஜூன் 29 பின்னிரவு 1 மணியளவிலும் 17 வயது சிறுவனை உடல் ரீதியாக பாலியல் வன்கொடுமை செய்ததாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அவை.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017 பிரிவு 14 (ஏ)ன்கீழ் பியு அஸ்மான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அந்தக் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டு வரை சிறைத் தண்டனையும் பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

வெவ்வேறு நீதிமன்றங்களில் சுமத்தப்பட்டு உள்ள இதர ஒன்பது குற்றச்சாட்டுகளையும் அவர் எதிர்நோக்குகிறார்.

கம்போங் மேருவில் உள்ள ஒரு வீட்டில் 2022 ஆகஸ்ட் 16ஆம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை வாட்ஸ்அப் செயலி மூலம் மற்றொரு 17 வயது சிறுவனை பாலியல் தொடர்புகொள்ள ஊக்குவித்ததாக அஸ்மான் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டும் அதில் அடங்கும்.

நீதிமன்றத்தில் தண்டனை அறிவிக்கப்பட்டபோது அஸ்மான் சியா அமைதியாகக் காணப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்