பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் சாபா மாநிலத்தில் சினைப்பை புற்றுநோய்க்கு ஆளான ஒரு 19 மாதக் குழந்தையின் சிகிச்சைக்காக அந்நாட்டு மக்கள் மொத்தம் 30,000 ரிங்கிட் (9,000 வெள்ளி) தொகையை நன்கொடையாக அளித்துள்ளனர்.
டனீன் அவ்னி ரிக்சி என்ற அக்குழந்தை, கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து மலச் சிக்கல் போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டதாக அதன் தாயான ஃபால்லாரிஸ்டியா சின்டோம் கூறியதாக மலாய் மொழி நாளிதழான சினார் ஹரியான் தெரிவித்தது. பரிசோதனைகளில் குழந்தையின் உடலுக்குள் 13.5 சென்டிமீட்டர் நீளம்கொண்ட கட்டி இருப்பது தெரிய வந்தது.
பிறகு டனீன் மூன்றாம் கட்ட சினைப்பை புற்றுநோய்க்கு ஆளானதை மருத்துவர் கண்டறிந்ததாகவும் டனீனுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் சொன்னதாகவும் தாய் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை மூலம் டனீனின் உடலில் இருந்த கட்டி அகற்றப்பட்டது. ஆனால், குழந்தை தொடர்ந்து கீமோத்தெரப்பி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் திருவாட்டி ஃபால்லாரிஸ்டியா சொன்னார்.
கீமோதெரப்பிக்கு அதிக செலவாகும் என்பதால் டனீனின் பெற்றோர் முதலில் சீர்குலைந்துபோயினர். ஆனால், மலேசியர்கள் ஒன்றுசேர்ந்து குழந்தைக்காக 30,000 ரிங்கிட்டுக்கும் மேலான தொகையை நன்கொடையாக அளித்ததையடுத்து அவர்களுக்கு நம்பிக்கை பிறந்தது.
செய்தி வெளியானதிலிருந்தே பலர் நன்கொடை அளித்து வருவதாகவும் பலர் இன்னமும் தங்களைத் தொடர்புகொள்வதாகவும் திருவாட்டி ஃபால்லாரிஸ்டியா குறிப்பிட்டார். டனீன் மேற்கொண்ட கீமோத்தெரப்பி சிகிச்சை முடிந்துவிட்டது; எனினும், சிகிச்சை சரியாகச் சென்றதை உறுதிப்படுத்த குழந்தை தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.