பெற்றோர் ஒருவரின் சம்மதத்துடன் சிறார் சமய மாற்ற எதிர்ப்பு வழக்கு; மே மாதம் தீர்ப்பு

பெற்றோர் ஒருவரின் சம்மதத்துடன் சிறார் சமய மாற்ற எதிர்ப்பு வழக்கு; மே மாதம் தீர்ப்பு

2 mins read
7d3c933c-0f4f-4682-9780-37e32cf71d03
தமது மகளைத் தம்மிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று ஏறத்தாழ 16 ஆண்டுகளாக போராடி வருகிறார் திருவாட்டி எம். இந்திரா காந்தி. - படம்: டுடே ஆன்லைன்
Google News Preferred Icon

கோலாலம்பூர்: சிறார் சமய மாற்றத்துக்குப் பெற்றோர் ஒருவரின் சம்மதமே போதுமானது எனும் மாநிலச் சட்டத்தை எதிர்த்து திருவாட்டி எம்.இந்திரா காந்தி மலேசிய உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக மே 21ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்குடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரின் வாதங்களையும் கேட்ட பிறகு, நீதிபதி அலிசா சுலைமான் இந்த முடிவை எடுத்தார்.

இந்த வழக்கை திருவாட்டி இந்திரா காந்தி 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடுத்தார்.

2009ஆம் ஆண்டில் திருவாட்டி இந்திராவின் அப்போதைய கணவர் முகம்மது ரிதுவான் அப்துல்லா இந்து சமயத்திலிருந்து இஸ்லாத்துக்கு மாறினார். திருவாட்டி இந்திராவின் அனுமதி இல்லாமல் தமது பிள்ளைகளின் சமயத்தையும் மாற்றினார். ஆக இளைய மகளான 11 மாதக் குழந்தை பிரசன்னாவை அழைத்துக்கொண்டு அவர் மாயமானார்.

இந்நிலையில், சிறார் சமய மாற்றத்துக்குப் பெற்றோர் ஒருவரின் சம்மதமே இருந்தால் போதாது என்றும் அத்தகைய சமய மாற்றம் செல்லாது என்றும் 2018ஆம் ஆண்டில் மலேசிய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பெற்றோர் இருவரும் உயிருடன் இருந்தால் இருவரின் பரஸ்பர ஒப்புதலும் தேவை என்று நீதிமன்றம் கூறியது.

திருவாட்டி இந்திராவின் மூன்று பிள்ளைகளும் அவருடன் இருக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

திரு ரிதுவானைத் தேடிக் கண்டுபிடித்து, பிரசன்னாவை திருவாட்டி இந்திராவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மலேசியக் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டது.

ஆனால், ஏறத்தாழ ஏழு ஆண்டுகள் ஆகியும் அத்தீர்ப்பு நிறைவேற்றப்படவில்லை.

பிரசன்னாவின் இருப்பிடம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

திருவாட்டி இந்திராவின் ஏறத்தாழ 16 ஆண்டுகள் போராட்டம் தொடர்கிறது.

மாநிலச் சட்டத்தைவிட கூட்டரசு சட்டத்துக்கு அதிக அதிகாரம் உள்ளது என்று திருவாட்டி இந்திராவின் வழக்கறிஞரான ராஜேஷ் நாகராஜன் வாதிட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக மாநிலச் சட்டத்தில் உள்ள நியாயத்தை எடுத்துரைக்க எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் தவறிவிட்டதாக அவர் கூறினார்.

ஆனால், இந்த வழக்கு தொடர்பாக திருவாட்டி இந்திரா காந்திக்கு சட்ட ரீதியாக எந்த ஒரு தகுதியும் இல்லை என்று கூட்டரசுப் பிரதேச இஸ்லாமிய சமய மன்றத்தைப் பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் டேனியல் ஃபர்ஹான் ஸைனுல் ரிஜால் கூறினார்.

மாநிலச் சட்டம், இஸ்லாத்தின் ஷாரியா சட்டம் ஆகியவற்றை எதிர்ப்பதே அவர்களது நோக்கமாக இருப்பதாக அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்