பெட்டாலிங் ஜெயா: சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மாநிலங்களில் உள்ள 18 சிறுவர் இல்லங்களில் பாலியல் கொடுமைகள் நடப்பது காவல்துறை நடத்திய சோதனையில் தெரிய வந்தது.
‘குளோபல் இக்வான் குரூப்’ என்னும் குழுமத்துடன் தொடர்புடைய இல்லங்களில் சிறுவர் கொடுமை நிகழ்ந்ததாக காவல்துறை தலைமை அதிகாரி ரஸாருதீன் ஹுசைன் கூறினார்.
“இல்லங்களில் தங்கியுள்ள சிறுவர்கள் ஒருவரை ஒருவர் மானபங்கம் செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டனர். நிலைமை அபாயகட்டத்தை எட்டும் வரை, உடல்நலம் இல்லாத சிறுவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்படவில்லை.
ஐந்து வயது குழந்தைகள்கூட துன்புறுத்தலுக்கு ஆளானார்கள். அவர்கள் தப்பு செய்யும்போது கொதிக்கும் கரண்டியால் சூடு வைக்கப்பட்டனர்.
மருத்துவச் சோதனை என்ற பெயரில் சிறுவர்களின் உடல் முழுவதும் இல்லப் பராமரிப்பாளர்கள் தொட்டுத் தடவினர்.
சிறுவர்களையும் சமய நம்பிக்கையையும் பயன்படுத்தி இல்லங்களுக்கு வெளியே இரக்கத்தை ஏற்படுத்தி பணம் சம்பாதிப்பதும் நடந்துள்ளது,” என்று அந்த அதிகாரி கொடுமைகளை விவரித்தார்.
அந்தக் குழந்தைகள் யாரும் அனாதைகள் அல்லர் என்பது ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்தது.
கைக்குழந்தைகளாக இல்லத்துக்குக் கொண்டு வந்து அவர்களுக்கு சமய நம்பிக்கையை ஏற்படுத்தும் போதனைகள் வழங்கப்பட்டதாகவும் பெற்றோர்களுக்குத் தெரிந்தே அது நடந்ததாகவும் தெரிவித்த திரு ரஸாருதீன் அது மிகவும் கொடுமையானது என்றார்.
தொடர்புடைய செய்திகள்
அங்கு மரணங்கள் நிகழ்ந்திருப்பதற்கான சாத்தியத்தை அவர் மறுக்கவில்லை. சம்பவங்கள் குறித்து தீர விசாரிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
18 இல்லங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 402 குழந்தைகள் மீட்கப்பட்டனர். அவர்களில் சிறுவர்கள் 201 பேர்; சிறுமியர் 201 பேர். மேலும், மீட்கப்பட்ட குழந்தைகளின் வயது 1 முதல் 17 வரை.
குழந்தைக் கொடுமை தொடர்பாக 171 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் 17 வயதுக்கும் 64 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். தங்குவிடுதி பராமரிப்பாளர்களும் ஆசிரியர் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக திரு ரஸாருதீன் தெரிவித்தார்.
போர்ட் டிக்சனில் உள்ள அறநிறுவன இல்லத்தில் குழந்தைகள் பாலியல் கொடுமை மற்றும் மானபங்கம் செய்யப்படுவதாக செப்டம்பர் 2ஆம் தேதி அளிக்கப்பட்ட புகார்களைத் தொடர்ந்து சிறுவர் இல்லங்களில் சோதனை தொடங்கியதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, தான் நடத்தும் இல்லங்களில் சிறுவர்களைத் தவறாகப் பயன்படுத்துவதாகக் கூறப்பட்ட புகார்களை ‘குளோபல் இக்வான் குரூப்’ மறுத்துள்ளது.

