கோலாலம்பூர்: மலேசியாவில் சிறார் பாலியல் துன்புறுத்தல் படங்கள், காணொளிகளைப் பதிவுசெய்து விநியோகித்துவந்த இணையக் கும்பலை முறியடிக்கும் நடவடிக்கையை அந்நாட்டுக் காவல்துறை மேற்கொண்டுள்ளது.
31 தனிநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் முகம்மது காலிட் இஸ்மாயில் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களில் ஆசிரியர்களும் மாணவர்களும் அடங்குவர் என்று அவர் கூறியதாக மலாய் மெயில் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
மலேசிய தேசிய காவல்துறை (பிடிஆர்எம்), அதன் குற்றவியல் விசாரணைப் பிரிவின் மூலம் மலேசியத் தொடர்பு, பல்லூடகக் குழுவுடன் (எம்சிஎம்சி) இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் 880,000 மின்னிலக்கப் பதிவுகள் கண்டெடுக்கப்பட்டதாக திரு காலிட் சொன்னார். இந்தக் கூட்டு நடவடிக்கை ஆப் பிடோ (Op Pedo) என்றழைக்கப்படுகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் 22லிருந்து 30ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 14 மாநில அமைப்புகள், பிடிஆர்எம், எம்சிஎம்சி ஆகியவற்றைச் சேர்ந்த 206 அதிகாரிகள் 37 இடங்களில் இந்நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில் குறிவைக்கப்பட்ட 37 பேரில் 31 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக திரு காலிட் தெரிவித்தார்.
“சந்தேக நபர்கள் அனைவரும் 12லிருந்து 71 வயதுக்கு உட்பட்ட ஆண்கள். அவர்கள் ஆசிரியர்கள், பொறியாளர்கள், கணினி ஓவியக் கலைஞர்கள் (graphic designers), சமையல் கலைஞர்கள், பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள், வேலை கிடைக்காதவர்கள் எனப் பல்வேறு பின்னணிகளிலிருந்து வந்தவர்கள்,” என்று ஆப் பிடோ தொடர்பான செய்தியாளர் கூட்டத்தில் அவர் விவரித்தார்.
சந்தேக நபர்களில் 17 பேர் மீது ஏற்கெனவே நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக திரு காலிட் கூறினார். இதர 14 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார். சந்தேக நபர்களில் 30 பேர் மலேசியர்கள் என்றும் ஒருவர் வெளிநாட்டவர் என்றும் திரு காலிட் தெரிவித்தார்.
மேலும், கணினிகள், கைப்பேசிகள், மோடெம் இயந்திரங்கள் உள்ளிட்ட 82 மின்னிலக்க இயந்திரங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

