மேடான்: சட்டவிரோதக் குழந்தை தத்தெடுப்புத் திட்டங்களை நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் ஒன்பது பேரை இந்தோனீசியாவின் வட சுமத்திரா மாநிலக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் மூவரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இவர்கள் அனைவரும் சமூக ஊடகங்களில் சட்டவிரோதமாகக் குழந்தை தத்தெடுப்புத் திட்டங்களை நடத்தி குழந்தைக் கடத்தலில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.
சந்தேக நபர்களின் பெயர்களின் முதல் எழுத்தை மட்டும் வைத்துக் காவல்துறையினர் அவர்களை அடையாளப்படுத்தினர். அவர்கள் குறைந்தது இரு குழந்தைகளையாவது விற்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது என்றார் மேடான் மூத்த காவல் ஆணையர் ஷோன் கேல்வின் சிமான்யுன்டாக்.
ஒவ்வொரு குழந்தையும் ஒன்பது மில்லியன் ரூப்பியாவிலிருந்து (680 வெள்ளி) 25 மில்லியன் ரூப்பியா வரையிலான விலைக்கு விற்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார். மூன்றாவது குழந்தையை விற்க முயன்றதாக நம்பப்படும் வேளையில் காவல்துறை சந்தேக நபர்களைக் கைது செய்தது.
“ஃபேஸ்புக், டிக்டாக் குழுக்களின் மூலம் சந்தேக நபர்கள் குழந்தைகள் குறித்து விளம்பரப்படுத்தினர். இந்தக் கும்பல் மிகவும் சிறந்த முறையில் தங்கள் ‘கட்டமைப்பை’ நடத்தியது,” என்று செய்தியாளர் கூட்டம் ஒன்றில் திரு ஷோன் தெரிவித்தார்.
வட சுமத்திராவில் உள்ள பல்வேறு நகரங்கள், ரியாவ் மாநிலத் தலைநகர் பெக்கான்பாரு, அச்சே மாநிலம் ஆகிய இடங்களில் இருப்போரிடம் அந்தக் குழந்தைகள் விற்கப்பட்டதாக நம்பப்படுவதாகக் காவல்துறை கூறியது.
மேடான் ஜோகூர் வட்டாரத்தில் உள்ள ஜாலான் பின்டு அயர் IVல் வாடகை வீடு ஒன்றில் சந்தேகம் தரும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அக்கம்பக்கத்தினர் தந்த தகவலைக் கொண்டு இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததெனக் காவல்துறை குறிப்பிட்டது. கர்ப்பிணிகள் பலர் அந்த வீட்டுக்கு வந்து போனது தெரிய வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களில் ஒருவரான பி.எஸ் என்பவரை அவரின் விருப்பமின்றி அந்த வீட்டில் வலுக்கட்டாயமாக தங்க வைக்கப்பட்டதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன என்றார் திரு ஷோன். எனினும், அந்த வாடகை வீட்டைக் காவல்துறை சோதனையிட்டபோது அப்பெண் வலுக்கட்டாயமாகப் பிடித்து வைக்கப்படவில்லை என்பதும் அங்கு அவர் குழந்தை பெற்றுக்கொள்ளக் காத்திருந்ததும் தெரிய வந்தது.
தொடர்புடைய செய்திகள்
சம்பந்தப்பட்ட பெண், குற்றக் கும்பல் என நம்பப்படும் கும்பலிடம் தனது குழந்தையை ஒன்பது மில்லியன் ரூப்பியாவுக்கு விற்க ஒப்புக்கொண்டதாக திரு ஷோன் சொன்னார்.

