ஜகார்த்தா: மேற்கு ஜாவாவில் குழந்தைகளைக் கடத்தும் கும்பலை விசாரிக்கச் சிங்கப்பூர்க் காவல்துறையுடன் இணைந்து இந்தோனீசியக் காவல்துறை பணியாற்றுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாண்டுங், பொன்ட்டியானாக், ஜகார்த்தா வழியாகக் குழந்தைகள் கடத்தப்படுவதாகத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அதிகாரிகள் கூட்டுப் புலனாய்வைத் தொடங்கினர்.
ஜகார்த்தாவில் இயங்கும் ‘இன்டர்போல்’ எனும் அனைத்துலகக் காவல்துறையின் தேசிய மத்திய அலுவலகத்தின் உதவியோடு புலனாய்வு மேற்கொள்ளப்படுகிறது.
கடத்தல் நடவடிக்கை எங்குத் தொடங்கி எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பின்தொடர்ந்து ஆராய்வதாக அலுவலகத்தின் செயலாளர் பிரிகேடியர் ஜெனரல் உன்துங் வித்யாத்மோக்கோ தெரிவித்தார்.
“சிங்கப்பூர்க் காவல்துறை, சாட்சிகளை விசாரிக்கும். அவற்றுக்கான கேள்விகளை மேற்கு ஜாவா புலனாய்வாளர்கள் தயாரித்துக் கொடுப்பர். இவை அனைத்தும் ஜகார்த்தாவின் இன்டர்போல் அலுவலகத்தின் மூலம் மேற்கொள்ளப்படும்,” என்றார் அவர்.
கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் சிங்கப்பூரர்கள் மூவரைக் கண்டுபிடிப்பதில் உதவவும் சிங்கப்பூர்க் காவல்துறை இணங்கியிருப்பதாக பிரிகேடியர் ஜெனரல் உன்துங் சொன்னார்.
மேற்கு ஜாவா காவல்துறை, 22 சந்தேக நபர்களின் பெயர்களை ஜூலை மாதம் வெளியிட்டது. குறைந்தது 25 குழந்தைகளை அவர்கள் கடத்தியதாகக் காவல்துறை குற்றஞ்சாட்டியது. 15 குழந்தைகள் ‘தத்தெடுப்பு’ எனும் போர்வையில் சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஒவ்வொரு குழந்தையும் சுமார் $20,000க்கு விற்கப்பட்டதாக மேற்கு ஜாவா காவல்துறையின் குற்றவியல் புலனாய்வு இயக்குநர் ஆணையர் சுரவான் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தோனீசியாவில் 2007ஆம் ஆண்டிலிருந்து நடப்பில் உள்ள மனிதக் கடத்தலுக்கு எதிரான சட்டத்தின்கீழ் சந்தேக நபர்கள் குற்றஞ்சாட்டப்படுவர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒருவருக்கு 15 ஆண்டுவரை சிறைத்தண்டனையோ கிட்டத்தட்ட $46,000 அபராதமோ விதிக்கப்படக்கூடும்.


